அன்னூர் அருகே தடையை மீறி ரேக்ளா பந்தயம்

Classic

அன்னூர் அருகே ரேக்ளா பந்தையம் நடத்தியதற்கு வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்ள தயார் என தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் பண்டிகையின்போது துவங்கி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டிகள் நடைபெறுவது வழக்கம். உச்சநீதிமன்ற தடை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாககருதப்படும்இப்போட்டிகள் நடைபெறவில்லை.
இந்த ஆண்டும் தடை நீக்கப்படாததால் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவை மாவட்டம், அன்னூர் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையம் என்னும் கிராமத்தில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒன்று கூடிய உள்ளூர் இளைஞர்கள் தடையை மீறி நாட்டு மாடுகள் பூட்டப்பட்ட இரட்டை மாட்டு வண்டிகளில் ரேக்ளா பந்தயத்தை நடத்தினர்.

பெரியபுத்தூர் செல்லாண்டியம்மன் கோவிலில் இருந்து கெம்பநாயக்கன்பாளையம் கிராமம் வரை ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு நடத்தப்பட்ட இப்போட்டியில் பத்திற்கும் மேற்பட்ட இரட்டை மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.

உள்ளூர் இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்தோடு போட்டியிட்டு ஒன்றுக்கொன்று முந்தி செல்ல வண்டிகளை ஒட்டிச்சென்றனர். பின்னர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கிராமமக்கள் சார்பிலும் கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பிலும் பரிசு கோப்பைகளும் பணமுடிப்பும் வழங்கப்பட்டன.

பொங்கல் தினத்தன்று பல ஆண்டுகளாய் இக்கிராமத்தில் ரேக்ளா போட்டிகள் நடைபெற்று வருவதாகவும், இது போன்ற பாரம்பரியமிக்க கிராம விழாக்களை தடை செய்வது இயலாது என தெரிவிக்கும் தமிழக விவசாய சங்கத்தினர் இதற்காக வழக்கு பதிவு செய்தால் எதிக்கொள்ள தயார் என்றனர்.

jagadish