இந்திய மீனவர்கள் 4 பேருக்கு 20ம் தேதி வரை காவல்

share on:
Classic

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னாரில் கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களையும் வரும் 20 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு மன்னார் துணை நீதிபதி இ.கயஸ்பெல்டானோ இன்று உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 4 இராமேஸ்வரத்து மீனவர்களை கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் நேற்று சனிக்கிழமை இரவு 9.45 மணியளவில் கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கருப்பையா குமாரவேல் (44), முனியான்டி சுப்பிரமணியம்(39),சின்ன மணியன், நம்பு(41),சுந்தர ராஜ் கார்த்திகை சாமி(65) ஆகிய 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த 4 மீனவர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது யாழ்ப்பாண இந்திய உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் துணை நீதிபதி இ.கயஸ்பெல்டானோ, 4 மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளையில் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களும் யாழ்ப்பாணம் கடற்படை அதிகாரிகளிடம் இன்று கடற்படையினர் ஒப்படைநத்துள்ளார்கள். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

மொத்தமாக 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் இரண்டு படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Loading...

jagadish