இன்று முதல் ஏ.டி.எம்கள் செயல்பட தொடங்கியுள்ளன

share on:
Classic

கடந்த 2 நாட்களாக மூடப்பட்டிருந்த ஏ.டி.எம்.கள் இன்‌று முதல் செயல்பட தொடங்கி உள்ளன.

நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கையாக வங்கிகளுக்கு ஒருநாளும், ஏ.டி.எம்.களுக்கு 2 நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று முதல் வழக்கம்போல் வங்கிகள் செயல்படத் தொடங்கின. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தினர். மேலும், புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்றனர். இந்தநிலையில், இன்று முதல் ஏ.டி.எம். சேவை வழக்கம்போல் தொடங்கி உள்ளன.

ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க மக்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கையாள ஏடிஎம்-களில் தொழில்நு‌ட்ப மேம்பாடு செய்ய அவகாசம் தேவைப்படும் என்பதால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைக்க சில நாட்களாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று புதிய 500 ரூபாய் நோட்டும் கிடைக்க தாமதம் ஆகும் என கூறப்படுகிறது.

இதனால், ஏ.டி.எம்.களில் 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பண பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்திற்கு பின்னர், இன்று தொடங்கி உள்ள ஏடிஎம் சேவையில் இயல்பு நிலை திரும்ப குறைந்தது 10 நாட்கள் ஆகும் என வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

surya