இஸ்ரேல்: துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் படுகாயம்

share on:
Classic

இஸ்ரேலில், பொதுமக்கள் மீது பாலஸ்தீனியர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

மத்திய இஸ்ரேலின் பெட்டா டிக்வா நகரில் உள்ள சந்தைப் பகுதியினுள் நுழைந்த பாலஸ்தீனியர் ஒருவர், அங்கிருந்த மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு கத்திக்குத்து தாக்குதலையும் மேற்கொண்டார்.

இந்த தாக்குதலில் பொதுமக்கள்6 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து பேசிய இஸ்ரேல் காவல்துறையினர், கைது செய்யப்பட்டவரின் வயது 19 என்றும், ஆக்கிரமிப்பு மேற்கு கரையின் வட பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்றும் தெரிவித்தனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை 250ற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள், 41 இஸ்ரேலியர்கள், 2 அமெரிக்கர்கள் மற்றும் ஒரு ஜோர்டானியர் உட்பட பலர் இதுபோன்ற தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

jagadish