எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : மு.க ஸ்டாலின் வாழ்த்து

share on:
Classic

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நினைவைப் போற்றுவதுடன், எவ்வித பலனும் எதிர்பாராமல் அவர் மீது உண்மையான அன்பு கொண்டிருப்போருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு 17-1-2017 ல் நிறைவு பெறுகிறது. தொடக்க நிலையில் திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் தலைவர் கலைஞர் அவர்களுடன் இணைந்து பயணித்தவர். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த போதும் திரு எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் தலைவர் கலைஞர் அவர்களுக்குமான ஆழமான நட்பு தொடர்ந்தது.

தன்னுடன் இருந்தவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை கருணாநிதி என்று குறிப்பிட்ட போதெல்லாம் அவர்களைக் கண்டித்துத் திருத்தியவர் எம்.ஜி.ஆர் என்பதை மறந்துவிட முடியாது. மறைந்த திரு எம்.ஜி.ஆர் அவர்கள் தனிப்பட்ட முறையில் என்னிடமும் அன்பும் பாசமும் காட்டி ஊக்கம் ஊட்டியவர். தி.மு.கழகக் கொள்கைப் பிரச்சார நாடகத்தில் நான் நடித்த போது, அதற்குத் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கி என்னை உற்சாகப் படுத்தியதை என்னால் மறக்க முடியாது.

அரசியல் நாகரிகமும் பண்பாடும் போற்றும் தலைவர் கலைஞர் அவர்கள், மறைந்த திரு எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிடத்தை சீரும் சிறப்புமாக அமைத்தும், தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகத்திற்கும், தரமணியில் உள்ள திரைப்பட நகருக்கும் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்டியதையும் இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறேன்.

மறைந்த திரு எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பெறும் இந்த நேரத்தில் அவரது நினைவைப் போற்றி, எவ்வித பலனும் எதிர்பாராமலும் அனுபவிக்காமலும் அவர் மீது உண்மையான அன்பு கொண்டிருப்போருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்களின் நினைவைப் போற்றுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Loading...

surya