close
முகப்புஏர் இண்டியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஒப்புதல்

ஏர் இண்டியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஒப்புதல்

January 10, 2018 172Views
ஏர் இண்டியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஒப்புதல்

ஏர் இண்டியாவில் வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் 49 சதவிகிதம் வரை முதலீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏர் இண்டியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான ஏலம் கூடிய விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஒப்புதலின் வாயிலாக, 51சதவிகிதம் என்ற பெரும்பான்மை முதலீட்டு உரிமை மத்திய அரசின் வசம் இருக்கும் என்றும், 49சதவிகிதம் என்ற பகுதியளவு முதலீட்டு உரிமை குறிப்பிட்ட அந்த வெளிநாட்டு தனியார் நிறுவனத்தின் வசம் இருக்கும் என்றும் விளக்கப்பட்டுள்ளது. 49சதவிகிதம் அளவிலான அன்னிய முதலீட்டிற்கு தற்போது அனுமதி வழங்கி இருப்பினும் ஏர் இண்டியாவின் ஒட்டுமொத்த அதிகாரமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மார்ச் மாதம் முடிவடையும் 2017ஆம் நிதியாண்டில் ஏர் இண்டியாவின் மொத்த கடன் தொகை 48,877 கோடி ரூபாயாகும். இதில் 17,360 கோடி ரூபாய்  விமானத்திற்காகவும், 31,517 கோடி ரூபாய் செயல்பாட்டு மூலதனத்திற்காகவும் கடனாக பெறப்பட்டிருந்தன. 2017-18ஆம் நிதியாண்டில் ஏர் இண்டியாவின் நிகர நஷ்டம் 3,579 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி, சில்லரை நிறுவன வர்த்தகத்தில் 100% அன்னிய நேரடி முதலீட்டிற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிங்கிள் பிராண்டு ரீட்டைல் முறையில் இதற்கு ஓப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும்,  கட்டுமான வளர்ச்சித் துறையில் 100சதவிகிதம் அன்னிய நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில், எளிமையாக வர்த்தம் செய்வதற்கு ஏற்ற நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா 100வது இடத்திற்கு முன்னேறி இருந்தது. இதையடுத்து, இந்த அதிரடி ஒப்புதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.