கர்நாடக அரசைக் கலைப்பது தான் தீர்வா? - ராமதாஸ்

share on:
Classic

தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்குவதில் கர்நாடகம் பிடிவாதம் காட்டினால் அந்த அரசைக் கலைப்பது தான் தீர்வா என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் நெருங்கிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பிரச்சினையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், அதை பாதுகாக்கும் அமைப்புகளையும் எந்த அளவு அவமதிக்க முடியுமோ, அந்த அளவு கர்நாடகம் அவமதித்திருப்பதாக ராமதாஸ் குற்றஞ்சாடியுள்ளார்.

வன்முறைகளை தூண்டி விடுவதன் மூலமும், கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை எனக்கூறி மோசடி செய்வதன் மூலமும் தமிழகத்திற்குரிய தண்ணீரை தர மறுப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

உரிமைப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பிரதமர் நரேந்திரமோடி ஆணையிட வேண்டும் என்றும் அதன்பிறகும் நீர் வழங்க கர்நாடக அரசு மறுத்தால், கர்நாடக முதலமைச்சர் ‘கனத்த இதயத்துடன்’ சில செயல்களை செய்வதைப் போல மத்திய அரசும் ‘கனத்த இதயத்துடன்’ சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அந்த நடவடிக்கையில், அரசியலமைப்பு சட்டத்தின் 356 ஆவது பிரிவை பயன்படுத்தி கர்நாடக அரசை கலைப்பதும் ஒன்றாக இருக்க வேண்டுமா? என்பதை நாம் முடிவு செய்ய வேண்டிய தருணம் நெருங்கி விட்டதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

Loading...

vaitheeswaran