கர்நாடக வன்முறையைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் : திமுக ஆதரவு

share on:
Classic

கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து செப்டம்பர் 16 அன்று நடைபெறும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முழு கடையடைப்புப் போராட்டம் நடத்திட தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு லாரி உரிமையாளர்களின் சம்மேளனம், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டல் உரிமை யாளர்கள் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இந்த முழு கடை அடைப்புப் போராட்டத்திற்கு தி.மு. கழகத்தின் ஆதரவினை அந்த அமைப்புகளின் சார்பில் கோரப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கையினை ஏற்று வரும் 16ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள முழு கடையடைப்புப் போராட்டத் திற்கு ஆதரவு தருவதென திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்திருக்கிறது.

எனவே தி.மு. கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவரும் இந்தப் போராட்டத்திற்கு தங்களின் முழு ஆதரவினைத் தந்து, போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்திற்கு பாமகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

Loading...

vaitheeswaran