காவிரி வாரியம் அமைக்கக்கோரி பாமக சார்பில் போராட்டம்

share on:
Classic

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று கூறி தமிழ்நாட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மத்திய அரசு செய்த துரோகம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் எத்தகைய அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டும், எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது குறித்த அனைத்து விவரங்களையும் காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதித் தீர்ப்பில் தெளிவாக வரையறுத்திருக்கிறது. அத்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டியது மட்டும் தான் மத்திய அரசின் பணியாகும்.

ஆனால், இப்படி ஒரு ஆணையத்தை அமைத்தால், அது காவிரி ஆற்றில் கர்நாடகம் நடத்தி வரும் தண்ணீர் கொள்ளையை அம்பலப்படுத்தி விடும். அதனால், அரசியல்ரீதியாக பின்னடைவு ஏற்படும் என்பதாலேயே மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசும், ஆட்சி செய்யும் பாரதிய ஜனதாவும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்றன.

மேலாண்மை வாரியத்தை அமைக்காததற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணங்கள் எதுவும் உண்மையல்ல.

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசு, அலட்சியமாக இருந்து தமிழக உரிமைகளை பறிகொடுத்த தமிழக அரசு ஆகியவற்றைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 8-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். ” என்று தெரிவித்துள்ளார்.

Loading...

vaitheeswaran