கொலிஜியம் பரிந்துரைத்த 34 நீதிபதிகள் உயர்நீதிமன்றங்களுக்கு நியமனம்

share on:
Classic

கொலிஜியம் பரிந்துரைத்த 77 நீதிபதிகளில் 34 நீதிபதிகள் உயர்நீதிமன்றங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீதிபதிகளை தேர்ந்தெடுக்க அரசுக்கு அனுமதியில்லை என கூறி கண்டித்த உச்சநீதிமன்றம், கொலிஜியம் முறைப்படியே, நீதிபதிகளை பரிந்துரைக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை அரசு பதவியமர்த்தவில்லை என்று சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பாக பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி தாக்கூர் அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த அக்டோபர் இறுதியில் விசாரணை நடைபெற்றபோது, நீதிமன்றத்தை ஸ்தம்பிக்க செய்ய மத்திய அரசு முயல்வதாக தலைமை நீதிபதி குற்றம்சாட்டினார். அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி அளித்த உறுதிமொழியை தொடர்ந்து கோபத்தை தணித்த உச்சநீதிமன்றம் வழக்கை மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்தது.

அப்போது கொலிஜியம் பரிந்துரைத்த 77 நீதிபதிகளில், 34 நீதிபதிகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியது. 43 நீதிபதிகள் பெயர்களை மறு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் முகுல் ரோகத்கி தெரிவித்தார். இதையடுத்து வரும் 15ம் தேதி கொலிஜியம் கூடும் எனவும், அதன்பிறகு நீதிமன்றத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க உள்ளதாகவும் கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

Loading...

surya