கோவை கலவரம் : திமுக தலைவர் கருணாநிதி கண்டனம்

share on:
Classic

கோவையில் இந்து முன்னணிப் பொறுப்பாளர் சசிகுமார் படுகொலையையொட்டி நடைபெற்ற கலவரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “22-9-2016 அன்று கோவையில், இந்து முன்னணியின் பொறுப்பாளர்களில் முக்கியமான ஒரு இளைஞர், சசிகுமார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இது வேதனையிலும் வேதனையான செய்தி. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் அந்தப் படுகொலையைக் காரணமாக வைத்து, கோவை மாநகரில் நடைபெற்று வரும் வன்முறைகள் கண்டிக்கத் தக்கவையாக உள்ளன. இந்து முன்னணியினர், சட்டத்தைத் தங்கள் கைகளிலே எடுத்துக் கொண்டு, வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, இந்தக் கொலைக்கே சம்பந்தம் இல்லாதவர்களை - அப்பாவிகளை யெல்லாம் மிரட்டுவதும், தாக்குவதும், கடைகளை மூடும்படி கட்டாயப்படுத்துவதும் சமூக விரோதச் செயல்கள் ஆகும்.

குறிப்பாக கோவையில் சிறுபான்மை சமுதாயத்தினர் நடத்துகின்ற பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், கடைகள் ஆகியவற்றைப் பயங்கரமாகத் தாக்கி நாசம் செய்திருக்கிறார்கள். வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன.

காவல் துறையினர் இப்படிப்பட்ட வன்முறைச் செயல்களுக்குச் சிறிதும் இடம் கொடுக்காமல், உண்மைக் குற்றவாளிகளைத் தாமதமின்றிக் கண்டுபிடித்து உரிய தண்டனை சட்டப்படி வாங்கிக் கொடுப்பது தான் நியாயமாக இருக்கும். ” என்று தெரிவித்துள்ளார்.

Loading...

suresh