ஜல்லிக்கட்டுக்கு வலுக்கும் இளைஞர்களின் ஆதரவு: 2வது நாளாக தொடரும் போராட்டம்

share on:
Classic

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் கைது செய்தவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள், இளம் பெண்களின் போராட்டம் இரவு, பகலாக தொடர்கிறது.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்களை போலீசார் கைது செய்தது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள், காலை முதலே ஒன்று கூடினர்.

சமூக வலைதளம் மூலமாக ஒன்றிணைந்த இவர்கள், சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை நிறுத்திக் கொள்ள போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும், அதிகாரிகள் நடத்திய மூன்று கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனிடையே மாலை நேரத்தை கடந்து போராட்டம் தொடர்ந்த போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அப்போது, அங்கு திரண்டிருந்த இளைஞர்கள், மாணவர்கள் தங்களது செல்போன் மூலம் டார்ச் லைட் அடித்து போராட்டத்தை தொடர்ந்தனர். முதலமைச்சர் பன்னீர்செல்வம் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து, தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதனால் மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டம் நேற்று காலை தொடங்கி இரண்டாவது நாளாக நீடிக்கிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் போராட்ட களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Loading...

surya