ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

share on:
Classic

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டியில் பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இளம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

லக்னோவில் இடம்பெற்றுவரும் இந்த தொடரில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்த்துக் களமிறங்கியது. போட்டியின் 14வது நிமிடத்தில் கிரைக் ஒரு கோல் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு முன்னிலை தந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 42வது நிமிடத்தில் குர்ஜந்த் முதல் கோலையும், 48வது நிமிடத்தில் மந்தீப் இரண்டாவது கோலையும் பதிவு செய்தனர். இதனால், இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பின் ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஷார்ப் தன்பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, போட்டி 2-2 என சம நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து, இரு அணி வீரர்களாலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாததால் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக பெனால்ட்டி ஷூட்-அவுட் முறை பின்பற்றப்பட்டது.

இதில் இந்திய அணி 4 கோல்களையும், ஆஸ்திரேலிய அணி 2 கோல்களையும் பதிவு செய்தன. இதனால் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Loading...

surya