தடையை மீறி தமிழகம் முழுவதும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி

share on:
Classic

புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலை கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டியை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா துவக்கி வைத்தார். கீழநிலைக்கோட்டையில் உள்ள திடலில் மாடுகளுக்கு வஸ்திரம் கட்டிய பின்னர், மஞ்சுவிரட்டு போட்டியை அவர் துவக்கி வைத்தார். தகவலறிந்து வந்த போலீசார், போட்டியை தடுத்து நிறுத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சினையில் திமுக, காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

இதனிடையே மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை கிராம மக்கள் நடத்தினர். ஏராளமான மக்கள் ஜல்லிகட்டை கண்டு ரசித்தனர். இதேபோன்று மேலூர் அருகே பதினேட்டான்குடி அருகேயும் காளைகளை வயல் பகுதியில் அவிழ்த்துவிட்டு, ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், அங்கு கூடியிருந்தவர்களை விரட்டினர்.

கோபி அருகே உள்ள கூடக்கரை கிராமத்தில் தடையை மீறி வாடிவாசல் அமைத்து ஜல்லிகட்டு நடத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிகட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தநிலையில், இந்தாண்டு பல இடங்களில் தடையை மீறி ஜல்லிகட்டு நடத்தப்பட்டது. கோபி அருகே உள்ள கூடக்கரை கிராமத்தில் இந்தாண்டு முதல் முறையாக ஜல்லிகட்டு போட்டி நடத்தப்பட்டது. இதற்காக ஊருக்கு வெளியே உள்ள விவசாய நிலத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. கிராமத்தில் வளர்க்கப்பட்ட காளைகள், கன்றுகளை கொண்டு வந்து பொதுமக்கள் அவிழ்ந்துவிட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார், ஜல்லிகட்டுக்கு அனுமதி மறுத்தனர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டுக்கு அனுமதிக்காவிட்டால் அடுத்த
ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் ஜல்லிகட்டு தடையை மீறி நடத்தப்படும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தடையை மீறி எருதாட்டம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. வேம்பனோ அய்யனாரப்பன் கோயில் திடலில் 18 பட்டி கிராம மக்கள் சேர்ந்து 50க்கும் மேற்பட்ட காளைகளை கோயில் முன்பு நிறுத்தி பூஜை செய்தனர். பின்னர், வழக்கமான முறையில் கோயிலைச்சுற்றி எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், போலீசார், எருதாட்ட நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.

Loading...

surya