தனது பாணியில் ஆட்டத்தை முடித்த தோனி

share on:
Classic

ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைப்பெற்ற பரபரப்பான போட்டியில் புனே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னாள் கேப்டன் தோனி கடைசி பந்தில் பவுண்டரி விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார்.

புனே, ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மாலை புனேவில் தொடங்கியது. டாஸ் வென்ற புனே அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்நது களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் வார்னர், தவான் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அந்த அணி 55 ரன்கள் எடுத்த போது தவான் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய வில்லியம்ஸ்சன் 21 ரன்களிலும், கேப்டன் வார்னர் 43 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹென்ட்ரிக்ஸ் அதிகபட்சமாக 55 ரன்கள் குவித்தார்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்த வீரராக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ஸ்மித்தும், திரிபதி நிதனமாக ஆடினர். ஸ்மித் 27 ரன்களிலும், திரிபதி 59 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணி 16.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து தடுமாறி கொண்டிருந்தது.

புனே அணி வெற்றிக்கு அடித்தளமாக நட்சத்திர வீரர் தோனி களத்தில் இருந்தது ரசிகர் மத்தியில் ஆறுதலாக இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அதிரடியாக ஆடிய தோனி அரைசதம் கடந்தார். கடைசி 2 ஓவரில் 30 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் தோனி 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச அரங்கமே உற்சாகத்தில் ஆழ்ந்தது. பரபரப்பான கடைசி ஒவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தவாரி மற்றும் தோனி 5 பந்துகளில் 8 ரன்கள் சேர்த்தனர். கடைசி பந்தில் 2 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் அனைவரும் போட்டியின் முடிவை காண ஆவலாக இருந்தனர். எந்த படபடப்பும் இல்லாத தோனி தனது வழக்கமான முறையில் கடைசி பந்தை பவுண்டரிக்கு விளாசி புனே அணியை வெற்றி பெற செய்தார். புனே அணியின் வெற்றிக்கு வழிவகுத்த தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Loading...

vijay