தூத்துக்குடியில் தண்ணீர் வராததை கண்டித்து மறியல் போராட்டம்

share on:
Classic

தூத்துக்குடியில் 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டாலும் வறட்சி காரணமாகவும் தற்போது குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீர் எடுப்பதற்கு பல கிலோ மீட்டர் சென்றும், பலமணி நேரம் காத்திருந்தும் தண்ணீர் எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி மீனவர் காலனியை சார்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் 30நாள்களுக்கு மேலாக தண்ணீர் வரவில்லை என தெரிவித்து காலிக்குடங்களுடன் விஇ சாலையில் இன்று திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்கள், பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் பங்கேற்றதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். காவல்துறையினர் மற்றும் மாநகாரட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் காரணமாக விஇ சாலை பகுதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்துச் சென்றனர்.

Loading...

surya