நடுவரிடம் ரோகித் ஷர்மா வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை : ஹர்பஜன் சிங்

share on:
Classic

புனே அணிக்கெதிரான லீக் போட்டியின்போது நடுவரிடம் ரோகித் ஷர்மா வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை என மும்பை அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

 செய்தியாளர்களிடம் பேசிய ஹர்பஜன் சிங், கடைசி ஓவரில் புனே வீரர் ஜெய்தேவ் உனட்காத் வீசிய 3வது பந்து பேட்ஸ்மேனின் எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்றதாகவும், அதனை அடிக்க முயன்று பந்தின் அருகே ரோகித் ஷர்மா சென்றதாகவும், ஆனால் நடுவரால் அந்த பந்து 'வைட்' (Wide) என அறிவிக்கப்படாதது வருத்தம் அளித்ததாகவும் தெரிவித்தார்.

 இதையடுத்து, வைட் என்று அறிவிக்காதது ஏன் என நடுவரிடம் கேள்வி எழுப்பிய ரோகித் ஷர்மா, பந்துவீச்சு விதிகளை விளக்குமாறு கோரியதாகவும், ஆனால் நடுவருடன் ரோகித் ஷர்மா வாக்குவாதத்தில் ஈடுபட்டு முடிவை மாற்றி அறிவிக்குமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்படுவது தவறு என்றும் ஹர்பஜன் தெரிவித்தார். 

மேலும், தங்களைக் காட்டிலும் புனே அணி சிறப்பாக விளையாடியதால் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும் அவர் கூறினார். நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக ரோகித் ஷர்மாவிற்கு போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவீதம் தொகை அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Loading...

Sathya