நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : விஷால் நேரில் ஆஜராக உத்தரவு

share on:
Classic

நடிகர் ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடிகர் விஷால் வரும் 22ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

கடந்த  2015ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. நடிகர் சங்கத்தை நிர்வகித்த முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தனர். 

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ராதாரவி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கில் முடிவெடுக்கப்படும் வரை ராதாரவி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என விஷால் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. 

ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராதாரவி நீக்கப்பட்டார். இதனையடுத்து நடிகர் சங்கம் மற்றும் செயலாளர் விஷாலுக்கு எதிராக ராதாரவி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உத்தரவாதம் அளித்துவிட்டு ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக நடிகர் சங்க செயலாளர் விஷால் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என கோரப்பட்டதை ஏற்று இன்று விலக்களித்த நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக வரும் 22ம் தேதி  விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

News Counter: 
65
Loading...

Sathya