புயலால் சேப்பாக்கம் மைதானத்தில் சிக்கல் இல்லை : தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம்

share on:
Classic

சேப்பாக்கம் அரங்கில் 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் சிக்கல் இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் 4 போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில் 5வது மற்றும் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் அரங்கில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

நேற்று முன்தினம் வர்தா புயல் கரையைக் கடந்தபோது சேப்பாக்கம் அரங்கம் உட்பட சென்னையின் பல்வேறு இடங்கள் பாதிப்புக்குள்ளாயின. இதனால் திட்டமிட்டபடி சென்னையில் 5வது டெஸ்ட் போட்டியை நடத்துவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சமர்ப்பித்துள்ள நிலவர அறிக்கையில், புயலால் சேப்பாக்கம் அரங்கின் சில பொருட்கள் சேதமடைந்ததாகவும், ஆனால் மைதானத்தில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதால் போட்டியை நடத்துவதில் சிக்கல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளை மறுநாள் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை 4-0 என கைப்பற்றினால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக விராத் கோலி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading...

vaitheeswaran