மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு பாமக ஆதரவு

share on:
Classic

காவிரி பிரச்சினையில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து விவசாய சங்கங்கள் அறிவித்துள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்படுவதையும், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதையும் கண்டித்து நாளை மறுநாள் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இப்போராட்டத்திற்கு பா.ம.க.வின் ஆதரவை அந்த அமைப்புகள்  கோரியுள்ளன.போராட்டத்திற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை வலியுறுத்தி தான் பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட நாட்களாக போராடி வருகிறது என்பதாலும், தமிழகத்தின் நலன் காப்பதற்காக நடத்தப்படுகிறது என்பதாலும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தை ஆதரிக்க பாட்டாளி மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது.  

அதேபோல், மற்ற அனைத்துத் தரப்பினரும் இப்போராட்டத்தை ஆதரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கடையடைப்புப் போராட்டத்திற்கு தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

vaitheeswaran