முதல்வர் உடல்நிலை பற்றிய வதந்தி - மக்கள் பதட்டம் : ராமதாஸ்

share on:
Classic

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நேற்று பிற்பகலில் பரவிய வதந்திகளால் தமிழகத்தின் பல பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “விஷமிகள் பரப்பிய வதந்திகளைத் தொடர்ந்து வேலூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கடைகளை அ.தி.மு.க. நிர்வாகிகள் மிரட்டி மூட வைத்துள்ளனர். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் முழுமையான உடல் நலம் பெற வேண்டும் என்பது தான் எனது விருப்பம். தமிழக மக்களும் இதையே விரும்புகின்றனர். இத்தகைய சூழலில் முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இந்த வதந்திகளால் பல வகைகளில் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டன. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும், பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கும் நேற்றிரவு பயணம் செய்ய இருந்தவர்களில் பெரும்பான்மையினர் கடைசி நிமிடத்தில் பயணத்தை ரத்து செய்து விட்டனர்.

கடைகள் மூடப்பட்டதால் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. காவல்துறை தலையிட்டு, வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த பிறகு தான் பல இடங்களில் ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இதனால், முதலமைச்சர் ஜெயலலிதா அவரது உடல்நிலை குறித்து காணொலி மூலமாகவோ, வீடியோ பதிவு மூலமாகவோ விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

Loading...

vaitheeswaran