முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு..

Classic

தமிழக அரசியலிலும், திரைத்துறையிலும் சிறந்து விளங்கிய ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமலவள்ளி. சந்தியா ஜெயராமன் தம்பதியின் இரண்டாவது குழந்தையான ஜெயலலிதா 1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பிறந்தார். பெங்களூர் பிஷப் கார்டனில் பள்ளிப் படிப்பை படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் மேல்படிப்பை பயின்றார்.

படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்த அவர், கல்வியோடு கலையிலும் ஆர்வமாக இருந்ததால் சிறு வயதிலேயே பரத நாட்டியம் பயின்று 12வது வயதில் நடன அரங்கேற்றம் செய்தார். இசைத்துறையையும் விட்டுவிடக் கூடாது என்று கர்நாடக சங்கீதத்தை கற்றுக் கொண்டு இசைக் கருவிகளை மீட்டவும், இனிமையாகப் பாடவும் ஜெயலலிதா கற்றுக் கொண்டார். தாய்மொழி தமிழைப்போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிறமொழிகளை சரளமாகப் பேசவும் கற்றுக் கொண்ட அவரது வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டு தாயார் சந்தியா போல தானும் திரையுலகப் பிரவேசம் செய்தார்.

தனது 15வது வயதில் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய ஜெயலலிதா தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும், 1965ம் ஆண்டு ஸ்ரீதரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிற ஆடை தான் அவரது முதல் தமிழ்ப்படம். இந்த திரைப்பட தயாரிப்பின்போதே பி.ஆர்.பந்துலுவின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்தார்.

எம்ஜிஆர் ஜெயலலிதா இணைந்து நடித்த படம் 100 நாட்கள் ஓடியதையடுத்து தொடர்ந்து பல படங்களில் இருவரும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர். வெண்ணிற ஆடை படம் வெளிவருவதற்கு முன் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த எபிசில் என்ற ஆங்கில படத்திலும் ஜெயலலிதா நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் பேசிய ஆங்கிலம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் நடித்தார்.

ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971ம் ஆண்டு காலமானதையடுத்து அவரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சூட்டினார். ஜெயலலிதாவின் 100வது திரைப்படமான "திருமாங்கல்யம்" 1977ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்ட அவருக்கு, 1980ல் வெளிவந்த "நதியைத்தேடி வந்த கடல்" என்ற திரைப்படமே கடைசிப்படமாக அமைந்தது.

சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்த பின்னர் சினிமா உலகை விட்டு விலகிய ஜெயலலிதா, 1982ல் அ.தி.மு.க.வில் உறுப்பினராகச் சேர்ந்து, தனது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அதே ஆண்டில், கடலூரில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தி, கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக நியமித்தார்.

1984ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான ஜெயலலிதாவுக்கு 185வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா அமர்ந்திருந்த இருக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

1987ஆம் ஆண்டு முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1989வது ஆண்டில் அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார் ஜெயலலிதா. அப்போது நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக 1989 முதல் 1991ஆம் ஆண்டு வரை செயலாற்றினார்.

இதனையடுத்து 1991ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 164 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து 1991ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக முதல்முறை பொறுப்பேற்றார். 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரையும், 2001ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் முதலமைச்சராக ஜெயலலிதா செயல்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மே 23ஆம் தேதி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்ட ஜெயலலிதாவை, "புரட்சித் தலைவி" என்றும் அம்மா என்று அக்கட்சியினர் அழைத்தனர்.

surya