ரயில் பொதுப்பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு : ராமதாஸ் கண்டனம்

share on:
Classic

ரயிலில் பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இயக்கப்படும் தொடர்வண்டிகளில் ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய எல்.எச்.பி (Linke Hofmann Busch-LHB) வகைப் பெட்டிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பெட்டிகள் வழக்கமான பெட்டிகளை விட அதிக இருக்கைகளும், நீளமும் கொண்டவை என்பதால், ஒரு தொடர்வண்டியில் வழக்கமான 24 பெட்டிகளுக்கு பதில் 22 பெட்டிகளை மட்டுமே இணைக்க முடியும். அதனால் பாண்டியன் விரைவு வண்டியில் இருந்த 4 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை 2 ஆக குறைக்கப்பட்டு விட்டது.

இவற்றில் மகளிருக்கான பெட்டியும், மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் வசதி கொண்ட பெட்டியும் அடங்கும். வழக்கமாக ஒரு பெட்டியில் 90 பேர் வீதம் 4 பெட்டிகளில் 360 பேர் பயணிக்க முடியும். இவர்கள் தவிர மேலும் பலர் இப்பெட்டியில் பயணம் செய்வார்கள்.

ஆனால், இப்போது ஒரு பெட்டிக்கு 100 பேர் வீதம் இரு பெட்டிகளில் 200 பேர் மட்டுமே பயணிக்க முடிகிறது. மகளிருக்கென தனிப் பெட்டி இல்லாததால் அவர்கள் ஆண்களுடன் நெரிசலில் சிக்கி பயணிக்க வேண்டியிருக்கிறது.

அதேபோல், சென்னை-மங்களூர் விரைவு வண்டியில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாக குறைக்கப்பட்டு விட்டது. சென்னை-திருச்சி இடையிலான மலைக்கோட்டை விரைவுத்தொடர்வண்டியில் இன்று முதல் எல்.எச்.பி பெட்டிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதனால் அத்தொடர்வண்டியில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாக குறைக்கப்படுகிறது.

எனவே, அனைத்து தொடர்வண்டிகளிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மற்றும் குறைந்த கட்டணம் கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அத்துடன் இராஜ்தானி, சதாப்தி, துராந்தோ விரைவுவண்டிகளின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.

Loading...

suresh