ரூபாய் நோட்டு விவகாரம் : திமுக மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு

share on:
Classic

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் படும் அவதிக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்து நவம்பர் 24ம் தேதி மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பா.ஜ.க அரசு எந்த முன்னேற்பாடும் இன்றி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று வெளியிட்ட அறிவிப்பால், கடந்த 10 நாட்களாக மக்கள் படும் துயரத்திற்கு அளவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் ஏழையெளிய, நடுத்தர மக்களின் துன்பங்களைக் களைய நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் வாதாடிய போதிலும், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து எந்தப் பதிலும் கூறவில்லை என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மற்ற மாநில முதலமைச்சர்கள் இந்தப் பிரச்னைக்காக மத்திய அரசை எதிர்த்து கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழகத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

வரும் 24ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் மனிதச் சங்கிலி நடத்தப்படும் என்றார்.

இந்த மனிதச் சங்கிலியில் திமுகவினர் மட்டுமின்றி கட்சி சார்பற்ற பொது மக்களும், வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட அனைவரும் பங்கேற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Loading...

vaitheeswaran