ரூபாய் நோட்டு விவகாரம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் தர்ணா

share on:
Classic

ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று, மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. தங்கள் எதிர்ப்பின் ஒருபகுதியாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், அதிமுக, தி.மு.க, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். ரூபாய் நோட்டு பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும் என்றும், இந்த நடவடிக்கையால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறி, அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், ரூபாய் நோட்டு பிரச்சினை காரணமாக, இரு அவைகளிலும் தொடர்ச்சியான அமளியும், ஒத்திவைப்புகளும் மட்டுமே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி. ராஜா, நாடாளுமன்றத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி வரவேண்டும் என்றார். உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மோடி, இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Loading...

surya