“21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் தள்ளிப்போக அதிமுக தான் காரணம்” : கே.எஸ். அழகிரி

share on:
Classic

21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலை நடத்த விடாமல் ஒத்திப்போடுவது அதிமுக - பாஜக கூட்டணி பேரங்களில் ஒன்று என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாத நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகும் எதிர்ப்பை சரிசெய்ய அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக திரைமறைவு தந்திரங்களை செய்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுகவினருக்கு உடன்பாடில்லாத நிலையில், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றில் சிக்கியுள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்களை காப்பாற்றி கொள்வதற்காக பாஜகவுடன் கூட்டணி அமைக்க பேரம் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடத்தவிடாமல் தள்ளிப்போடுவதற்கு அதிமுக தலைமை, பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. சுதந்திரமான, தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருக்கும் தேர்தல் ஆணையம், நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறி வருவது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. 

இந்தப் பின்னணியில் தான் அதிமுக, பிரதமர் மோடி மூலம் இடைத்தேர்தலை நடத்த விடாமல் தள்ளிப்பொடுகிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
எனவே, அரசியலமைப்பு சட்டப்படி ஜனநாயக முறைப்படி 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலோடு இணைத்து இடைத்தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.

அதிமுகவின் வற்புறுத்தல் காரணமாக மத்திய பாஜக அரசின் நிர்பந்தங்களுக்கு தேர்தல் ஆணையம் பணிந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் இணைந்து போராட வேண்டிய அவசியம் ஏற்படும் என எச்சரிக்கிறேன்” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

 
 

News Counter: 
100
Loading...

Ramya