4வது முறையாக பாலன் டி ஆர் விருதை பெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

share on:
Classic

சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பாலன் டி ஆர் விருதை (Ballon d'or) ரியல் மேட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காவது முறையாக வென்று அசத்தியுள்ளார்.

கிளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரருக்கு ஆண்டுதோறும் ஃபிரான்ஸ் பாலன் டி ஆர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தாண்டிற்கான சிறந்த வீரராக, ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றுவரும் லா லீகா தொடரில் ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடிவரும் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம் கடந்த 2008, 2013, 2014 என மூன்று ஆண்டுகள் இவ்விருதை வென்றிருந்த ரொனால்டோ இப்போது நான்காவது முறையாக பாலன் டி ஆர் விருதை தன்வசப்படுத்தி உள்ளார்.

விருதை பெற்ற பின்னர் பேசிய ரொனால்டோ, கோல்டன் பால் விருதை நான்காவது முறையாக வெல்வேன் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்றும், மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணருவதாகவும் கூறினார். இந்தாண்டில் இதுவரை 42 போட்டிகளில் களமிறங்கியுள்ள ரொனால்டோ 38 கோல்களை அடித்துள்ளதோடு, 14 கோல்களை அணியின் சக வீரர்கள் பதிவு செய்ய உதவியுள்ளார்.

முன்னதாக, இந்த விருதிற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அத்லெட்டிகோ மேட்ரிட் அணியைச் சேர்ந்த ஃபிரான்ஸ் வீரர் அண்ட்டோனியோ கிரீஸ்மன் மூன்றாமிடம் பிடித்தார். மறுபுறம், இம்முறை 6வது தடவையாக பாலன் டி ஆர் விருதை வெல்வார் என பெரிதும் எதிர்பாக்கப்பட்டிருந்த பார்ஸிலோனா அணி வீரர் லயோனல் மெஸ்ஸி இரண்டாமிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

surya