’96 படத்தின் புதிய கிளைமேக்ஸ்..

share on:
Classic

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பெரிய ஆரவாரம் ஏதும் இல்லாமல் வெளியான 96’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் 100 நாள் வெற்றிக் கொண்டாட்டம் படக்குழுவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

100 நாட்களை தொட்ட ’96 :

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ’96 திரைப் படம், பள்ளி பருவத்தில் உண்டாகும் முதல் காதலை நெகிழ்ச்சியுடன் சொன்னது. இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, 100 நாட்களை தொட்டுவிட்டது. இதையடுத்து படக்குழுவினர், இந்த வெற்றியை விழா எடுத்துக் கொண்டாடினர். தர்மதுரை, விக்ரம் வேதா படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு இது 3-வது 100 நாட்கள் படமாக அமைந்துள்ளது. இந்த விழாவில், இயக்குநர்கள் சேரன், சமுத்திரக்கனி, பார்த்திபன் ஆகியோர் கலந்துக் கொண்டு, ’96 படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, நாயகி த்ரிஷா, இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வெற்றிக் கேடங்களை வழங்கினர். 

 

காதல் மட்டும் போதும் :

விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன், "காதலிக்க காதலியோ காதலனோ தேவையில்லை. காதல் மட்டுமே போதுமானது. பொதுவாக ஆண், பெண் ஆசைப்படுவது ஓர் இடம், ஆனால் வாழ்க்கைப்படுவது வேறு ஒரு இடமாக இருக்கும். அது போல இந்த மியூசிக் சிம்பிள்கள் கொண்ட சட்டையை இளையராஜா நிகழ்ச்சியில் அணிந்து கொள்வதற்காக ஒரு மாதம் முன்பே வாங்கினேன். ஆனால் சில காரணங்களால் அங்கு நான் செல்லவில்லை. அந்த சட்டையோடு தான் இங்கே வந்திருக்கிறேன். யமுனை ஆற்றிலே பாடலின் உண்மையான வெர்ஷனை விட, இந்த படத்தில் அந்த பாடல் எப்போது வரும் என்று தான் காத்திருந்தேன். அந்த  காட்சியை பார்த்த பின் இயக்குநரின் கால்களை தொட்டு கும்பிட வேண்டும் என்று நினைத்தேன். இந்த படத்தில் இருக்கின்ற ஃப்ரேம் அனைத்திலும் பிரேம் தான் இருக்கிறார். 

 

த்ரிஷா மட்டும் தான் :

தியாகராய பாகவதருக்கு நிறைய பெண் ரசிகைகள் இருந்திருக்கிறார்கள். அவருக்கு பிறகு பெண்கள் மத்தியில் அதிக ஈர்ப்பு இருக்கிறது விஜய் சேதுபதிக்கு தான். அதை நினைத்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. சில படங்களுக்கு மட்டும்தான் த்ரிஷா இல்லை என்றால் நயன்தாரா. ஆனா, இந்தப் படத்துக்கு த்ரிஷா இல்லைனா த்ரிஷா மட்டும்தான். அவர் நடித்தது மாதிரி தெரியவில்லை. நான் முதன்முறையாக த்ரிஷாவைப் பார்க்கும்போது நடிக்கிறீங்களா?னு கேட்டேன். மாட்டேனு சொல்லிட்டாங்க. இந்த மாதிரி எத்தனையோ ஹீரோயின்கள் வாழ்க்கையைக் கெடுக்கலாம்னு நினைச்சிருக்கேன். அதில் தப்பித்தவர்கள் தான் த்ரிஷாவும் நயன்தாராவும். படம் முழுக்க நம்மை ஏமாற்றி காக்க வைத்து கடைசி வரைக்கும் ஒரு முறையாவது கட்டி பிடிக்கமாட்டாங்களா? என்று ஆர்வமாக இருந்தோம்.

 

படத்தின் புதிய கிளைமேக்ஸ் :

“விழாவில் பேசிய சேரன், இயக்குநர் பிரேம்குமாரை மேடைக்கு அழைத்து, அவரை கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். ஆனால் எனது அன்பை, திரிஷாவிடம் வெளிப்படுத்த தோன்றுகிறது." என்ற பார்த்திபன், த்ரிஷாவை மேடைக்கு அழைக்க, அவர் சங்கடத்தில் நெழிந்தார்! விடாப்பிடயாக இருந்த பார்த்திபன், ’பயப்படாம வாங்க’ என அழைக்க, தயங்கியபடியே வந்தார் திரிஷா!‘சில விஷயங்களை நாம நேரடியா செய்வதை விட, மற்றவர்களை வைத்து செய்வது தான் சிறந்தது’, என சொன்ன பார்த்திபன்,  விஜய் சேதுபதியை மேடைக்கு அழைத்த பார்த்திபன், ’இப்பவாச்சும்கட்டிப்பிடிங்க’ என்றார். 96 படத்தில் வரும் ‘காதலே காதலே’ பாடல் பின்னணி இசையாக ஒலிக்க, இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டனர். அப்போது அரங்கத்தில் ஆரவாரம் எழுந்தது. பிறகு ``இதுதான் படத்தின் க்ளைமேக்ஸ்" என்றார் விஜய் சேதுபதி. இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

News Counter: 
100
Loading...

aravind