
வங்கி கணக்கு, செல்போனுடன் ஆதாரை இணைக்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய அருண்ஜெட்லி, மக்களவை தேர்தலில் பாஜ.வை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மகா கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன, ஆனால் அவை தோல்வியில் முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், இதற்காக நடப்பு நிதியாண்டின் கடன் இலக்கை 70 ஆயிரம் கோடி ரூபாயாக அரசு குறைத்துள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் ஆதார் அட்டையை செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கில் இணைப்பதை கட்டாயமாக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும், அதை தவறாக பயன்படுத்தாத அளவுக்கு அதில் விதிகள் இருக்கும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்