close
முகப்புகனமழை காரணமாக  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

March 14, 2018 167Views
கனமழை காரணமாக  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடர்கனமழை காரணமாக நெல்லை, துாத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய பெருங்கடலில் குமரிக்கு தெற்கே, உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இதன் காரணமாக,  தென் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர்மழையால் ஆங்காங்கே தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. 

மேலும், தொடர் மழை எச்சரிக்கையை அடுத்து, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், பொதுத்தேர்வு வழக்கம் போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் கொட்டாரம், நாகர்கோவில்  உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.  அதே போன்று கடலோர பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்தது. 

இந்த இடி மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.  இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த மூன்று மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் குடிநீர் பிரச்சனைகள் இந்த மழையினால் ஓர் அளவு சரிசெய்து கொள்ள முடியும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அமராவதி அணையில் மிக குறைவான தண்ணீர் இருப்பதால் இந்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.