18 எம்.எல்.ஏ நீக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

share on:
Classic

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.  

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி, கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஆளுநரிடம் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தனித்தனியே கடிதம் அனுப்பினர். இது குறித்து 18  எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். அதன்படி, முதலமைச்சர் பழனிசாமியைத் தவிர வேறு ஒருவரை முதலமைச்சராக ஏற்க தயார் என 18 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளித்திருந்தனர். 

இதனால், ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையின் அடிப்படையில், 2017 செப்டம்பர் 18 ஆம் தேதி, தினகரன் ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியாக  உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்களும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 23-ந் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்தி வைத்தார். இந்த நிலையில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று  பிற்பகல் 1 மணிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Parkavi