சாலை வசதி கேட்டு கடந்த 40 ஆண்டுகளாக போராடி வரும் மலைவாழ் மக்கள்

share on:
Classic

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 14 பஞ்சாயத்துக்களில் தாய் கிராமமாக இருப்பது அரியூர் கஸ்பா கிராமம். மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர் இப்பகுதி மக்கள்.  

இப்பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு தார் சாலை அமைக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட அந்த தார் சாலை தற்போது மோசமான நிலையில் உள்ளது. இதையடுத்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக அரியூர் கஸ்பா கிராமத்திற்கு மிக அருகாமையில் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கப்பட்டது.

ஆனால் இடைப்பட்ட சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்காததால் போக்குவரத்துக்கு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் அரியூர் கஸ்பா கிராம மக்கள். மண் சாலையில் மழை காலங்களில் இரு சக்கர வாகனத்தில் மற்றும் நடந்தது கூட செல்ல முடியாத அளவுக்கு மண் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது என்பது இவர்களது குற்றச்சாட்டு.

போதிய சாலை வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாதை இதோ நாமே பார்க்கலாம். அரியூர் கஸ்பா கிராமத்திற்கு முறையான தார் சாலை வசதி இல்லாததால் இங்குள்ள மாணவர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு செல்ல முடியாத காரணத்தினால் மேற்படிப்பு பாதிக்கப்பட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் இக்கிராமத்தில் உள்ளவர்கள் தங்களுடை ரேஷன் பொருட்களை வாங்கி தலை சுமையாக கொண்டு வரும் சூழ்நிலை தற்போது நிலவி வருவதாகவும் மலை கிராம பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தங்கள் குறைகள் குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடமும், எம்.பி., எம்.எல்.ஏ.-க்களிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என குமுறும் மக்கள், போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்போவதாக அறிவித்துள்ளனர். 

அரியூர் கஸ்பா கிராமத்தை சுற்றியுள்ள குழிவளவு, அரியூர் கஸ்பா, தெகவாய்பட்டி, எழுமநாடிப்பட்டி, பரவாற்றுப்பட்டி, சேத்துக்கடை, கவரப்பட்டி, சோத்தாங்கூட்டுப்பட்டி, அக்கரைவளைவு உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்களின் சுமார் 1300 ஓட்டுகளுக்கு அரியூர் கஸ்பா கிராமத்தில் ஓட்டுசாவடி அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் அரியூர் கஸ்பா கிராமத்திற்கு தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எதிர்வரும் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறுகின்றனர் மலைவாழ் மக்கள்.

News Counter: 
100
Loading...

sasikanth