ப சிதம்பரம் கருப்பு பண வழக்கு: வருமானவரித்துறை விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Classic

கருப்புப் பண சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அளிக்கப்பட்ட அனுமதி குறித்த ஆவணங்களை ப.சிதம்பரம் குடும்பத்தினருக்கு வழங்கும்படி, வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டுச் சொத்துக்களையும், வங்கிக் கணக்குகளையும் மறைத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை, கறுப்புப் பண சட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் புகார் மனுவை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு தடை  கோரி நளினி சிதம்பரம் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தங்களுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளிக்க வருமான வரித்துறை அதிகாரிக்கு அதிகாரமில்லை என நளினி சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது. 

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்,நீதிமன்றம் உத்தரவிட்டால் வருமான வரித்துறை வழக்கு தொடர வழங்கப்பட்ட அனுமதி உத்தரவையும், புகாரையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த ஆவணங்களை  ப.சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு  வழங்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

News Counter: 
100

Parkavi