கனடாவில் மரிஜுவானா போதைப்பொருள் விற்பனை ஆரம்பம்

share on:
Classic

உருகுவே-விற்கு அடுத்தபடியாக கனடாவிலும்,  தனிநபருக்கான மரிஜுவானா போதைப்பொருள் சட்டப்பூர்வ விற்பனை இன்று முதல் தொடங்குகின்றது.

பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இயற்கை முறையில் கிடைக்கும் மரிஜுவானா போதைப்பொருளை பயன்படுத்துவதறகு அனுமதி கோரும் மசோதா மீது, கனடா நாடாளுமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், எம்.பி-க்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததால் மசோத ஒருமனதாக நிறைவேறியது. இதைத்தொடர்ந்து பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடூ, அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முதல் கனடாவில் மரிஜுவானா போதைப்பொருள் பயன்பாடு சட்டப்பூர்வமாக்கப்படும் என   அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், குழந்தைகளிடம் போதைப்பொருள் செல்லக்கூடாது என்பதை மனதில் வைத்து இம்மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதால் விற்பனையாளர்கள் கவனமாக வியாபாரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 

பிரதமரின் அறிவிப்பின்படி, இன்று முதல் கனடாவில் மரிஜுவானா போதைப்பொருள் விற்பனை களைகட்டவுள்ளது. இதை முன்னிட்டு, கனடாவின் பல்வேறு பகுதிகளில் பிரத்யேக கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இது மரிஜூவானா பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மரிஜுவானா விற்பனைக்கு அனுமதி அளித்துள்ள பிரதமர் ட்ரூடு, சில கடுமையான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். அதன்படி, பொதுவெளியில் 30 கிராம்களுக்கு மேல் மரிஜுவானாவை எடுத்துச் செல்வதற்கும், உரிமம் இல்லாத விற்பனையாளரிடமிருந்து கொள்முதல் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வீட்டில் நான்கு மரிஜுவானா செடிகளுக்கு மேல் வளர்க்கக் கூடாது என்ற விதியும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சிறுவர்-சிறுமிகளுக்கு மரிஜுவானாவை விற்பனை செய்பவர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், உலகிலேயே முதன்முறையாக உருகுவேயில் மரிஜுவானா தனிநபர் பயன்பாட்டிற்கு  சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த வரிசையில் இப்போது கனடாவும் இணைந்துள்ளது. கனடாவில் கடந்த 1923ஆம் ஆண்டு முதல் தனிநபர் மரிஜுவானா பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருப்பினும், 2001ஆம் ஆண்டு முதல் மருத்துவ பயன்பாட்டில் இருந்து வருவது நினைவுகூறத்தக்கது.

News Counter: 
100
Loading...

sankaravadivu