கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பதில் சிக்கல் ....!

Classic

கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி 

காவிரி பிரச்சனைக்கு இடையே, இரு மாநில பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கர்நாடக  சட்டப்பேரவை தேர்தல் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில்,  222 தொகுதிகளுக்காக மட்டும் நடைபெற்ற வாக்குப்பதிவில் 72.36 சதவிகித வாக்குகள் பதிவாயின. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 112 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.  

ஆட்சியைக் கைப்பற்றுவதில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் (JDS) இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், 38 மையங்களில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. துவக்கத்தில், காங்கிரஸும் பாஜக-வும் அடுத்தடுத்து முன்னிலை பெற்று வந்த நிலையில், பாஜக-வின் கை ஓங்கியது. 

வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி,  பாஜக 112 தொகுதிகளிலும், காங்கிரஸ் 68 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் 40 தொகுதிகளிலும், மற்றவை 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியும், ஜேடிஎஸ் கூட்டணியும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாஜக-வின் கனவிற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்: 

தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதனொரு பகுதியாக, கர் நாடகாவில் அமைந்துள்ள பாஜக அலுவலக வளாகத்தில் நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும், மோடி என்று முழக்கமிட்டவாறும் உற்சாக கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர். மகிழ்ச்சியின் இடையே, இன்று மாலை 6 மணியளவில், பாஜக நாடாளுமன்ற வாரியக் கூட்டம் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சித்தராமையா படுதோல்வி

இதனிடையே, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட கர்நாடக முதலமைச்சரும்,  காங்கிரஸ் பிரதான வேட்பாளருமான சித்தராமையா, சாமுண்டீஷ்வரி தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்ட  ஜேடிஎஸ் வேட்பாளர் தேவ கௌடா வெற்றி பெற்றுள்ளார். இதேபோல், சித்தராமையா போட்டியிட்ட மற்றொரு தொகுதியான பதாமியிலும் அவர் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தேர்தலில் முதலமைச்சர் சித்தராமையா படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் அவரது குடியிருப்புப் பகுதி, தொண்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் இவரது வீட்டின் அருகே கட்சித் தொண்டர்கள் புடைசூழ நிற்பது வழக்கம். ஆனால், தற்போதைய தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தொண்டர் ஒருவர் கூட இல்லாமல் சித்தராமையாவின் வீடு மற்றும் சாலைப்பகுதி வெறிச்சோடி உள்ளன.

இந்திய பங்குச்சந்தைகள் உச்சம்: 

பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றிருப்பதாக தகவல் வெளியானதும் இந்திய பங்குச்சந்தைகள் உச்சம் கண்டன. முற்பகல் நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 35,928 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 10,919 புள்ளிகளும் வர்த்தகமாயின.

மத்திய அமைச்சர்கள் இனிப்புகளை பகிர்ந்து கொண்டாட்டம்: 

பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன் மற்றும் ரவிஷங்கர் பிரசாத் உள்ளிட்டோர் இனிப்புகளை பகிர்ந்து கொண்டாடினர். டெல்லியில் இடம்பெற்ற இந்த கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

குழப்பம் நிறைந்த காங்கிரஸ் கட்சியை நோக்கி கர்நாடக மக்கள் செல்லாதது மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக தேர்தலில் பாஜக-விற்கு ஆதரளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகிப்பதை தொடர்ந்து புதுச்சேரியில் அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். வாக்கு எண்ணிக்கையில்  பெரும்பான்மையான இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். இதனால் பாஜகவினர் தேர்தல் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்..

News Counter: 
100

sankaravadivu