ஃபோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு 8,000 கோடி ரூபாய் அபராதம்

share on:
Classic

மாசுக்கட்டுப்பாட்டு மென்பொருள் ஊழல் புகாரில், ஜெர்மனி அரசு விதித்துள்ள 8,000 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தத் தயாராக இருப்பதாக ஃபோல்க்ஸ்வேகன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

டைம்லர் நிறுவனத்தின் வாகனங்களில் உள்ள மாசு கட்டுப்பாட்டு மென்பொருள் உரிய வகையில் செயல்படவில்லை என்றும், விதிகளுக்கு மாறாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, அந்நிறுவனத்தின் தலைவர் டைட்டர் ஸெட்ஷே (Dieter Zetsche), ஜெர்மனி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்ட்ரீஸ் இடையே சந்திப்பு நடைபெற்றது. இதில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்  விற்பனை செய்யப்பட்டுள்ள 2லட்சத்து 38ஆயிரம் டைம்லர்   வாகனங்களை திரும்பப் பெற வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட டைட்டர், Mercedes GLC 220d மற்றும் C-220d உட்பட அனைத்து வாகனங்களும் திரும்பப் பெறப்படும் என தெரிவித்தார். சந்திப்பின் முடிவில் பேசிய அமைச்சர், ஐரோப்பா முழுவதும் 7லட்சத்து 74ஆயிரம் வாகனங்கள் மென்பொருள் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதனிடையே, மாசுக்கட்டுப்பாட்டு மென்பொருள் டீசல் உமிழ்வு  ஊழலில் ஃபோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு தொடர்பிருப்பதாகவும், இதனால் அந்நிறுவனத்திற்கு 8,000 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் ஜெர்மனி அரசு அதிரடியாக அறிவித்தது. மேலும், டைம்லர் நிறுவனம் எந்த வழக்கில் சிக்கியுள்ளதோ அதே வழக்கில் ஃபோல்க்ஸ்வேகன் சிக்கியிருப்பதாகவும் தெரிவித்தது. 

இந்நிலையில், ஜெர்மனி அரசு விதித்துள்ள அபராதத்தொகையை செலுத்துவதற்கு தயாராக இருப்பதாக ஃபோல்க்ஸ்வேகன் நிர்வாகம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து பேசிய ஃபோல்க்ஸ்வேகன் தலைமை செயலதிகாரி Herbert Diess, பழைய டீசல் கார்களை புழக்கத்திலிருந்து நீக்கி வருவதாகவும், டையாக்ஸைடு அளவை 30 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தும் விதமாக மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டிருப்பதாகவும்  கூறினார். மேலும், தங்களது வாகனங்களில் காணப்படும் குறைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் டீஸ் தெரிவித்தார்.

உலகளவில், மாசுகட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கான மென்பொருளை உரிய முறையில் காரில் பொருத்தி அதை விற்பனை செய்யும் பணியில் ஃபோல்க்ஸ்வேகன் தோல்வி அடைந்திருப்பதாக ஜெர்மனி அரசு கடுமையாக சாடியுள்ளது. மேலும், குறைபாடுள்ள மென்பொருளைக் கொண்ட ஒரு கோடியே ஏழு லட்சம் டீசல் கார்கள்  இதுவரை உலகளவில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. 

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய குற்றத்திற்காக ஃபோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு அமெரிக்காவிலும் ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.  டைம்லர் மற்றும் ஃபோல்க்ஸ்வேகன் என இரண்டு மிகப்பெரிய ஜெர்மனி வாகன தயாரிப்பு நிறுவங்களும் அடுத்தடுத்து மாசுகட்டுப்பாட்டு குற்றச்சாட்டிற்கு இலக்காகி வருவதால் ஐரோப்பிய மோட்டார் உலகில் புதிய பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravindh