அதிரடியாய் சம்பளத்தை உயர்த்தி கோடிகளைத் தொட்ட நடிகைகள்...!!

share on:
Classic

ஹீரோக்களை விரட்டி விரட்டி காதலிப்பது, மரத்தை சுற்றி சுற்றி வந்து டூயட் பாடுவது, சில காட்சிகளில் செட் பிராஃபர்ட்டி போல் வந்து நிற்பதுமாக இருந்த நடிககளில் சிலர், திடீரென ரூட்டை மாற்றி, நல்ல கதைகளை தேடிப்பிடித்து நடிக்கத் தொடங்கியுள்ளதால், அவை ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வசூலை வாரிக் குவிக்கின்றன.

இதனால், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இதை சாதகமாக்கிக் கொண்ட சில நடிகைகள், ஜெட் வேகத்துக்கு உயர்ந்த மார்கெட்டால், கோடிகளை தொட்ட நடிகர்களுக்கு இணையாக, தங்களது சம்பளத்தையும் அதிரடியாய் உயர்த்தி உள்ளனர். அந்த வகையில், கோடிகளை தொட்ட நடிகைகள் யார்? யார்? யாருக்கு எவ்வளவு சம்பளம்..? என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்...! 

ஸ்ரீதிவ்யா:  

ஐதராபாத்தில் பிறந்த ஸ்ரீதிவ்யா, மூன்று வயதிலேயே தனது கலைப்பயணத்தை தொடங்கிவிட்டார். கிட்ட தட்ட பல தெலுங்கு படங்களிலும், சில டிவி சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் திவ்யா, 2010 ஆம் ஆண்டு ‘மனசார’ என்கிற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு,‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு வந்தார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக குடும்ப குத்து விளக்காக ஜொலித்த ஸ்ரீதிவ்யா, முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்தார்.

குடும்ப பாங்கான அழகும், இயல்பான நடிப்பும் சீதனமாக கொண்டு வந்த ஸ்ரீதிவ்யா,மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ‘காக்கி சட்டை’, ஜி.வி பிரகாஷ் ஜோடியாக ‘பென்சில்’, அதர்வாவுடன் ‘ஈட்டி’, விக்ரம் பிரபுவுடன்’வெள்ளைக்கார துரை’, விஷால் ஜோடியாக ‘மருது’, விஷ்ணு விஷால் ஜோடியாக‘மாவீரன் கிட்டு’ என தமிழின் முன்னணியில் ஹீரோக்களோடு நடித்து ஒரு ரவுண்ட் வந்தார். இப்போது தமிழில் அதர்வாவுடன்‘ஒத்தைக்கு ஒத்தை’படமும்,  சில தெலுங்கு படங்களையும் கை வசம் வைத்திருக்கும் ஸ்ரீதிவ்யா, ஒரு படத்துக்கு 75 லட்சத்திலிருந்து 1 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதாக தகவ்ல் வெளியாகியுள்ளது. 

ஹன்சிகா மோத்வானி: 

பிரபுதேவா இயக்கத்தில், ஜெயம் ரவி ஜோடியாக ‘எங்கேயும் காதல்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, தொடர்ந்து ‘மாப்பிள்ளை’,‘வேலாயுதம்’,‘ஒரு கல் ஒரு கண்ணாடி’,‘சிங்கம் 2’,‘ஆம்பள’,‘குலேபகாவலி’ என தமிழில் ஒரு ரவுண்ட் வந்தார்! பிறகு, தெலுங்கு திரையுலகத்துக்கு சென்று அங்கு இருக்கும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார். 

இப்போது மீண்டும் தமிழுக்கு திரும்பியிருக்கும் ஹன்ஷிகா தற்போது, தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். இப்போது அவர், விக்ரம் பிரபு ஜோடியாக ‘துப்பாக்கி முனை’, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘மஹா’ என அங்கொன்றும் இங்கொன்றுமாக நடித்து வருகிறார். ஒரு நேரத்தில் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி போன்ற முன்னணி ஹீரோக்களோடு ஜோடியாக நடித்த ஹன்சிகாவுக்கு  புதுமுகங்களின் வருகையால் வாய்ப்பில்லாமல் போனது. ஆகவே, சம்பள விஷயத்தில் கெடுபிடி காட்டுவதில்லை. ஆனால், படத்துக்கு ரூ.1 கோடிக்கு கீழே இறங்கவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். 

ஸ்ருதிஹாசன்: 

உலகநாயகன் கமல்ஹாசனின் கலை வாரிசு என்கிற அடையாளத்தோடு, 2000 ஆம் ஆண்டில் கமல் இயக்கி நடித்த‘ஹே ராம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் முகம் காட்டிய ஸ்ருதிஹாசன், குமரியான பிறகு, 2009 ஆம் ஆண்டில் ‘லக்’ என்கிற இந்திப் படத்தில் நாயகியாக  நடித்தார். மிகப்பெரிய எதிர்ப்பார்புடன் வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது. பின்னர், 2011 ஆம் ஆண்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக ‘7ஆம் அறிவு’படத்தின் மூலமாக தமிழில் சினிமாவில் தனது கணக்கைத் தொடங்கினார்.

தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கும் ஸ்ருதிஹாசன், தமிழில், விஷால் ஜோடியாக பூஜை, விஜய் ஜோடியாக ‘புலி’, அஜித் ஜோடியாக‘வேதாளம்’ என மிக குறைவான படங்களிலேயே நடித்திருக்கிறார். நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் திறமை உள்ள ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் படையை வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன், படத்துக்கு சம்பளமாக ரூ.1 கோடி வாங்குவதாக சொல்லப்படுகிறது.

ரகுல் பிரீத் சிங்: 

‘தடையறத் தாக்க’படத்தில் அறிமுகமாகி, பிறகு ‘புத்தகம்’,‘என்னமோ ஏதோ’போன்ற படங்களிலும் நடித்த ரகுல் பிரீத் சிங்கிற்கு, ஆரம்பத்தில் தமிழ் சினிமா கை கொடுக்காததால், தெலுங்கு திரையுலகத்துக்குப் போய் அதிரடி கவர்ச்சி காட்டி, அங்கே ஒரு நிலையான இடத்தைப் பிடித்தார். பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படம் மூலமாக மீண்டும் தமிழில் தனது கணக்கை புதுப்பித்த ரகுல் பிரீத் சிங்கிற்கு, கார்த்தி ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’படம் கை கொடுத்தது. 

ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகை என சொல்லப்பட்ட ரகுல் பிரீத் சிங்,‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்குப் பிறகு ராசியான நடிகையாக மாறியிருக்கிறார்.‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை தொடர்ந்து மீண்டும் கார்த்தியுடன் இணைந்து நடித்த ‘தேவ்’ படம், ஏமாற்றினாலும், ப்ரீத்திக்கு எந்த பாதிப்பும் இல்லை! தம்பி கார்த்திக்கு ஜோடியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங், இப்போது ‘என்ஜிகே’ படத்தில் சூர்யாவுடன் ஜோடியாக இணைந்துள்ளார்.

தெலுங்கிலும் அதிகப் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ரேஞ்ச் உயர்ந்த வேகத்தில் ரகுல் பிரீத் சிங்கின் சம்பளமும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு படத்துக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் ரகுல் பிரீத் சிங் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ்: 

ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், 2011 ஆம் ஆண்டில் ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை பிறகு, இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘அட்டகத்தி’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். பின்னர் ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ ஆகிய படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வந்த போது தான் ஐஸ்வர்யாவை, ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.‘அப் கம்மிங் ஆர்டிஸ்ட்’ என்கிற நிலையிலிருந்த ஐஸ்வர்யா,

தேசிய விருது வென்ற ‘காக்கா முட்டை’ படத்தில் சிறப்பான நடிப்பைக் காட்டி முன்னணி நாயகியாக மாறினார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த ‘வட சென்னை, மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’, விக்ரம் ஜோடியாக‘சாமி ஸ்கொயர்’, சிவகார்த்திகேயனின் தயாரிப்பில்‘கனா’ ஆகிய படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் இமேஜையும், மார்கெட்டையும் உயர்த்தியுள்ளன.

இப்போது, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’, மலையாளத்தில் நிவின் பாலியுடன்‘சகாவு’ என வரிசையாக படங்கள் வண்டி கட்டி நிற்குகின்றன. இதனால்,‘மோஸ்ட் வான்டெட்’ வரிசைக்கு வந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது ஒரு படத்துக்கு சம்பளமாக ஒரு கோடி ரூபாய் வரை கேட்டிருக்கிறார். 

சாய் பல்லவி: 

பள்ளி, கல்லூரியில் பாடம்  சொல்லிக் கொடுத்த கிளாஸ் டீச்சரை கூட மறந்து போன இளைஞர்கள், மலர் டீச்சரை மட்டும் மறக்காமல் இருக்கிறார்கள்! அந்தளவுக்கு, மலையாளத்தில் ஹிட் அடித்த ‘பிரேமம்’படத்தில் மலர் டீச்சராக வந்த சாய் பல்லவியை மனதிற்குள் ‘பிரேம்’ போட்டு வைத்திருக்கிறார்கள்.

‘பிரேமம்’ தந்த புகழால் தெலுங்கு திரையுலகத்திலும் கால்பதித்த சாய் பல்லவி, தமிழ் ரசிகர்களை மட்டும் தவிக்கவிட்டார். பிறகு,‘கரு’என்கிற படத்தின் மூலமாக தமிழில் தரிசனம் தந்து, அந்த தவிப்பைப் போக்கினார். அந்தப் படத்தில் ஆர்பாட்டமில்லாத அழகில், இயல்பான நடிப்பில், சலனத்தை ஏற்படுத்தினார் சாய் பல்லவி. 

புகழ் வந்த பிறகு சாய் பல்லவியின் போக்கு மாறியது.  சீன் போடுவது,சண்டக்கோழியாக மாறி சக நடிகர்களோடு சண்டை போடுவது என சாய் பல்லவி மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், பட வாய்ப்புகள் குறையவில்லை. சமீபத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த ‘மாரி 2’படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இதில் வரும் ‘ரவுடி பேபி’ பாடல் இணையத்தில் டிரெண்டிங் ஆகி, சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

அடுத்ததாக, செல்வராகவன் இயக்கத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் என்.கே.ஜி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நன்கு அறிந்த நடிகையாக இருப்பதால், தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளாராம். தற்போது சாய் பல்லவியின் சம்பளம், ஒரு கோடியை தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.  

திரிஷா: 

பட உலகில் புதுமுகங்கள் பலர் வந்து இறங்கினாலும், இன்னும் கிரீடம் இழக்காத இளவரசியாகவே இருக்கிறார் திரிஷா. சமீபத்தில் வெளிவந்த ‘96’ படத்தின் வெற்றியே இதற்கு சரியான சான்றாக இருக்கிறது. சினிமாவில் நடிக்க வந்து 20 வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் உள்ள அத்தனை லீடிங் ஹீரோக்களோடும் ‘டூயட்’ பாடி அலுத்துப் போன த்ரிஷா, இப்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது ‘கர்ஜனை’,‘சதுரங்க வேட்டை2’, ‘பரமபத விளையாட்டு’ போன்ற படங்களை  தன் வசம் வைத்திருக்கும் த்ரிஷா,‘96’ படத்தின் ஹிட்டுக்குப் பிறகு தன் சம்பளத்தை ரூ.1½ கோடியிலிருந்து 2 கோடியாக உயர்த்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஓவியா: 

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஓவியா, ‘களவாணி’ படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘களவாணி’ ஹிட்டுக்கு பிறகு ஒரு ரவுண்டு வருவாரென எதிர்பார்பை ஏற்படுத்திய ஓவியா, கமல்ஹாசனின் ‘மன்மதன் அம்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால், அந்தப் படங்கள் சரியாகப் போகாததால் தடுமாற்றமான நிலையில் இருந்த ஓவியாவுக்கு, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி, புதிய வாழ்க்கையை வழங்கியது.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியால் பிரபலமான ஓவியாவை நடிக்க வைக்கப் பட உலகத்தில் பலர் போட்டி போடுகின்றனர். ‘பிக்பாஸ்’ வீட்டிற்குள் இருந்ததை போன்ற கெட்டப் மற்றும் ஆட்டிடியூட்டில் ஓவியா நடித்து தற்போது வெளிவந்திருக்கும் ‘90 ML’ படத்தின் டிரைலரும், டீசரும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது படமும் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. 

இப்போது, ராகவா லாரன்ஸ் ஜோடியாக ‘காஞ்சனா 3’, ‘காட்டேரி’, ‘பல்லு படாமாப் பாத்துக்கணும்’ மற்றும் ‘சீனி’ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஓவியா. தனக்கு இப்போது இருக்கும் செல்வாக்கை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த நினைத்த ஓவியா, தனது சம்பளத்தை சரசரவென உயர்த்தியுள்ளார். ஓவியா தற்போது, ரூ.2 கோடி கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமலா பால்: 

‘வீரசேகரன்’என்கிற படத்தில் அறிமுகமாகி, பிறகு ‘சிந்து சமவெளி’ என்கிற வில்லங்கமான படத்தில் நடித்தும் விலாசம் இல்லாமலே இருந்த அமலாபால், ‘மைனா’ வந்த பிறகு தான் வெளிச்சத்துக்கு வந்தார். இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் அபிமானத்துக்குரிய நடிகையாக மாறி, பிறகு அவரையே காதலித்து திருமணமும் செய்து கொண்ட அமலா பால், சீக்கிரமே கல்யாண வாழ்க்கை கசந்து காதல் கணவர் விஜய்யிடமிருந்து விவாகரத்தும் வாங்கி உள்ளார்.

இப்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் அமலா பால், ரசிகர்களுக்கு இன்னும் அலுக்கவில்லை. விவாகரத்துக்குப் பிறகு வீறு கொண்டு எழுந்து நிற்கும் அமலா பால், சினிமாவில் விட்ட இடத்தைப் பிடிப்பதற்காக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார். 'அதோ அந்தப் பறவை போல', ‘காயம் குளம் கொச்சுண்ணி’ உள்ளிட்ட பல படங்களை கை வசம் வைத்திருக்கும் அமலாபால், ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

காஜல் அகர்வால்: 

தெலுங்கில் ‘மகதீரா’தந்த அடையாளம், தமிழில் சமபோட்டியாளராக இருக்கும் விஜய் – அஜித் படங்களின் நாயகி என்கிற அந்தஸ்து, சினிமா தவிர துணிக்கடை மற்றும் நகைக்கடை விளம்பரங்கள் கொடுத்த விலாசம், இந்தியில் ஹிட் அடித்த‘குயின்’படத்தின் தமிழ் ரீமேக் 'பாரீஸ் பாரீஸ்' படத்தில் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதாப்பாத்திரம் என கலக்கிவரும் காஜல் அகர்வால், விஜய்யின் ‘மெர்சல்’, அஜித்தின் ‘விவேகம்’படங்களுக்குப் பிறகு 1½ கோடியாக இருந்த தனது சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தி விட்டாராம்.

கீர்த்தி சுரேஷ்: 

குடும்பக் குத்து விளக்காக ‘ரஜினி முருகன்’ படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், அதே ரூட்டில் பயணம் செய்வதால், ரசிகர்கள் மனதில் பசை போட்டு ஒட்டிக் கொண்டார்.‘பைரவா’படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த கீர்த்தி சுரேஷ், சர்கார் 62 படத்தில் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.  

தமிழில் வெகு சீக்கிரத்தில் முன்னனி நடிகை வரிசைக்கு வந்திருக்கும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கு திரை உலகத்திலும் வெற்றிகரமான நாயகியாக வலம் வருகிறார். சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, தமிழ் - தெலுங்கு மொழிகளில் உருவாகி வெளிவந்த ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பாற்றலைக் காட்டி, தன்னையொரு ‘ஜூனியர் நடிகையர் திலகம்’ என நிரூபித்திருக்கிறார்.  விஷாலுடன் நடித்த ‘சண்டக்கோழி 2’ படத்தில் குறும்புத்தனமும், மீண்டும் விஜய்யுடன் இணைந்த ‘சர்கார்’ படத்தில் எதார்த்தமும் கலந்த நடிப்பையும் காட்டிய கீர்த்தி சுரேஷ், தற்போது ஒரு படத்துக்கு ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

தமன்னா: 

கொஞ்சம் புஸ்டியாக பூசினாற் போல இருக்கும் குண்டு நடிகைகளை கொண்டாடிய தமிழ் ரசிகர்கள், ஒல்லிக்குச்சி உடம்பில், பார்பிடால் பொம்மை போல இருக்கும் தமன்னாவையும் ரசிக்கிறார்கள். வெண்ணையில் செய்த குழந்தையைப் போல இருக்கும் தமன்னா  தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்தாலும், இரண்டு சைடும் பேலனஸ் பண்ணிக் கொண்டு பாதுகாப்பாக பயணம் செய்கிறார். இந்திய திரையுலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ‘பாகுபலி’ என்கிற மெகா ஹிட் படத்துக்குப் பிறகு தனது சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தி விட்டார் தமன்னா. 

சமந்தா: 

சினிமாவில் நடிகைகளின் ஆயுள் காலம் ரொம்பவும் குறைவு. எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், திருமணமானதும் ரசிகர்களுக்கு திகட்டிவிடும். ஆனால், சமந்தா மட்டும் ரசிகர்களுக்கு சலிக்கவில்லை. தமிழைப் போலவே தெலுங்கு சினிமா உலகத்திலும் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா, தெலுங்கு பட உலகத்தின் இளம் நாயகன் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டவர்.

திருமணத்துக்கு காதல் கணவரின் சம்மதத்துடன் சினிமாவில் நடிப்பை தொடரும் சமந்தா, தேனிலவை கூட தள்ளி வைத்து விட்டு, ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களை முடித்த பிறகே தேனிலவுக்கு சென்றனர். திருமணத்துக்குப் பிறகும் திகட்டாமல் இருக்கும் சமந்தா இப்போது, 'சூப்பர் டீலக்ஸ்',‘துக்ளக்’,‘அநீதி கதைகள்’ என கொஞ்சமும் செல்வாக்கு குறையாமலே இருக்கிறார். சமந்தா தற்போது, ரூ.2 கோடி சம்பளம் வாங்குவதாக தெரிவித்துள்ளனர். 

அனுஷ்கா: 

சில வருடங்களுக்கு முன்பு, சுந்தர்.சி இயக்கத்தில், மாதவனுக்கு ஜோடியாக ‘ரெண்டு’படத்தில் அறிமுகமான அனுஷ்காவை தமிழ் ரசிகர்கள் கண்டு கொள்ளாததால், ஆவேசத்தோடு தெலுங்கு பட உலகத்துக்குப் போய் அடித்துப் புரண்டு எழுந்து நின்று, ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடித்து, தனக்கென ஒரு ‘மாஸ்’உருவாக்கி கொண்ட பிறகு தான் அனுஷ்காவின் அருமை தமிழ் ரசிகர்களுக்கும் தெரிய வந்திருக்கிறது.

இதனால், அனுஷ்காவின் தெலுங்குப் படங்களை வரிசையாக தமிழில்‘டப்’ செய்து, கல்லா கட்டுகிறார்கள், தெலுங்கைப் போலவே தமிழ் சினிமாவிலும் முன்னணி நாயகியாக மாறிய பிறகு, தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்திவிட்டார் அனுஷ்கா. 

திருப்புமுனையாக அமைந்த ‘பாகுபலி’படத்தின் வெற்றிக்குப் பிறகு அனுஷ்காவின்‘மார்கெட் லெவல்’ தாறுமாறாக மாறியதால், தான் யாருக்கும் சளைத்தவரில்லை என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக தனது சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறார் அனுஷ்கா. 

நயன்தாரா: 

வசீகரமான அழகு, நவரசமான நடிப்பு இவற்றை சீதனமாக கொண்ட நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் நயன்தாரா. ஆகவே, மூன்று மொழிகளிலும் நயன்தாராவின் படங்களை வெளியிட்டு லாபம் பார்க்கிறார்கள். சிங்கங்களும், சிறுத்தைகளும் நிறைந்திருக்கும் சினிமா உலகத்தில்,பெண் புலியாக மாறி  ‘அறம்’ படத்தில் களம் இறங்கி, வெற்றிய குவித்து, லேடி சூப்பர் ஸ்டராக மாறியிருக்கும் நயன்தாரா, சமீபகாலமாக ஹீரோக்களோடு டூயட் பாடுவதை கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு, தற்போது கதாநாயகியை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

‘அறம்’,‘இமைக்கா நொடிகள்’,‘கோலமாவு கோகிலா’ போன்ற படங்கள் அத்தனை மொழிகளிலும் வசூலை அள்ளியதாலும், அவரின் படங்கள் தொடர்ந்து ஹிட் அடிப்பதாலும், அவரை மட்டுமே மையமாக வைத்து இயக்குநர்கள் கதைகளை உருவாக்குவதாலும், நயன்தாராவின் ‘இமேஜ்’ பலமடங்கு எகிறியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கி, சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விட்டாராம் நயன்தாரா. அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க, நயன்தாராவுக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan