ஏர்டெல், வோடஃபோன் ஐடியா பெருமூச்சு....! ஒருவழியாக பிரச்னை முடிந்தது

share on:
Classic

சிறப்பு சலுகைகள் குறித்து தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் தகவல் தெரிவிக்க வேண்டுமென்ற டிராயின் உத்தரவு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டுப்பாடுகள்:
வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான விலைகள் மற்றும் சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிடும் போது தங்களுக்கு தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' அண்மையில் அறிவுறுத்தியது. இதனால், ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் பெரும் அதிருப்தி அடைந்தன. மேலும், ஜியோ நிறுவனத்தை கண்டுகொள்ளாத டிராய் தங்கள் மீது மட்டும் அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதிப்பதாக இந்த 2 நிறுவனங்களும் குற்றம்சாட்டின. 

அதிரடி தீர்ப்பு:
இவ்விவகாரம் வெறும் குற்றச்சாட்டோடு மட்டும் நின்று விடாமல் டெலிகாம் சர்ச்சைகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TDSAT) வரை சென்றது. டிராயின் புதிய உத்தரவை எதிர்த்து பார்தி ஏர்டெல், வோடஃபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் சார்பாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிவில், தள்ளுபடி அறிவிப்புகள் மற்றும் ரீசார்ஜ் விலை குறித்து தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் டிராயிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என தீர்ப்பளித்தது. டிராய் சட்டம் பிரிவு 11(2)-ன்படி அபராதமோ அல்லது இழப்பீட்டு நிர்பந்தமோ செலுத்தும் அதிகாரம் டிராய் அமைப்பிடம் இல்லை என்றும் தீர்ப்பாயம் தெளிவுபடுத்தியது. மேலும், சட்டத்திற்கு புறம்பாக தொலைதொடர்பு நிறுவனங்கள் நடந்துகொண்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் டிராயிடம் இருப்பதாகவும் தீர்ப்பாயம் விளக்கியது.

இனி இஷ்டம் போல் சலுகைகள்:
தீர்ப்பாயத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிர்வாகங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. இனி தங்களது வாடிக்கையாளர்களுக்கு இஷ்டம் போல் சலுகை விலையில் விலைப்பட்டியலை தயார் செய்வதில் எந்தவித முட்டுக்கட்டையும் இல்லை என்ற சூழல் உருவாகி உள்ளது. முன்னதாக, ஜியோவை சமாளிக்க ஏர்டெல் நிறுவனத்துடன் வோடஃபோன் ஐடியா ஒன்றிணைய வாய்ப்பிருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

mayakumar