மீண்டும் பொறுப்பேற்றார் அலோக் வெர்மா... சிபிஐ சர்ச்சைக் கதை...

share on:
Classic

சர்ச்சையில் சிக்கி பதவி பறிபோகும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த சிபிஐ தலைமை அதிகாரி அலோக் வெர்மா உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் தற்போது பெருமூச்சு விட்டுள்ளார். 

சிபிஐ :
காவல்துறையினர் துப்பு கிடைக்காமல் தடுமாறும்போதும், நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய வழக்குகளின் உண்மைத் தன்மையைக் கண்டறியவும் அரசு நாடுவது சிபிஐ விசாரணையைத் தான். நாட்டின் உச்சபட்ச விசாரணை அமைப்பாக கருதப்படும் சிபிஐ-க்கு சென்று விட்டால் உண்மை என்னவென தெரிந்துவிடும் என்பது மக்களின் பொதுவான எண்ணம். ஆனால், இந்த எண்ணத்திற்கு தடை போடும் விதமாக அமைந்தது, சிபிஐ இயக்குனர்கள் லஞ்சப்புகாரில் சிக்கிய விவகாரம்.

எல்லாமே அண்ணந்தாங்க:
பிரபல இறைச்சி ஏற்றுமதி தொழிலதிபர் மொயின் குரோஷி முறைகேடாக தொழில் செய்து கறுப்புப்பணம் பதுக்கி வைத்திருப்பதாக கடந்த 2014-ஆம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. குரோஷியின் வீட்டை சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து முடித்தவுடன், அந்த வழக்கு எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முடித்து வைக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில் அண்மையில் புதிய புயல் கிளம்பியது. வீட்டை சோதனை செய்தபோது சிபிஐ தலைமை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் லஞ்சமாக வழங்கப்பட்டதாக குரோஷியின் இடைத்தரகர் வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் உறுதிபடுத்தப்பட்டிருப்பதாக மத்திய புலனாய்வுத்துறை தெரிவித்தது. இத்தகவல் ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தெரியவருவதற்கு முன்பாகவே, குற்றச்சாட்டிற்கு ஆளாகி விடுவோமோ? என்ற அச்சத்தில் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் மாறி மாறி புகார் அளிக்கத் தொடங்கினர். இவர்களது வாய்சண்டை ஒரு கட்டத்தில் முற்ற, குரோஷியிடமிருந்து 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அஸ்தானாவிற்கு எதிராக வழக்குபதிவு செய்தார் அலோக் வெர்மா. இதனால் கோபமடைந்த அஸ்தானா, அதே தொழிலதிபரிடம் அலோக் 2 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாகக் கூறி 50 பக்கங்களைக் கொண்ட புகார் அறிக்கையை தாக்கல் செய்தார். 

 

பிரதமர் மோடி நாட்டாமை:
சிபிஐ அமைப்பின் 2 தலைமை அதிகாரிகளும் பரஸ்பரம் லஞ்சக்குற்றச்சாட்டை சுமத்திக்கொண்ட விஷயம் பிரதமர் மோடியின் காதுகளுக்குச் சென்றது. இதைத்தொடர்ந்து, இருவரையும் நேரில் அழைத்துப் பேசினார் மோடி. பிரதமருடான சந்திப்பின் போது சிபிஐ தலைமைகளுக்குள் திடீரென எழுந்துள்ள பிரச்னைகள் மற்றும் குழப்பங்களுக்கான காரணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இச்சந்திப்பின் போது கூட இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை பிரதமரிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. 

 

பிரஷாந்த் பூஷன் ஆவேசம்:
இந்த விவகாரம் குறித்து பேசிய வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன், சிபிஐ இயக்குனருக்கான 2 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடையாமல் அலோக் வெர்மாவை பதவிநீக்கம் செய்யக்கூடாது என வலியுறுத்தினார். மேலும், பிரதமர், தலைமை நீதிபதி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழுவின் ஒப்புதல் பெறாமல் அலோக்கை பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். 

 

அதிரடி சோதனை:
இந்த அரசியல் சண்டைகளுக்கு நடுவே, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகளே சோதனை மேற்கொண்டனர். இந்திய வரலாற்றில் முதன்முறையாக சிபிஐ தலைமையகத்தில் அதன் சொந்த அதிகாரிகளின் மூலமாகவே சோதனை மேற்கொள்ளப்பட்டது இதுதான் முதன்முறை. சோதனையின் போது, சிபிஐ தலைமையக கட்டிடத்தின் 10 மற்றும் 11வது மாடியில் உள்ள 2 அதிகாரிகளின் அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும், குற்றம்சாட்டப்பட்ட 2 அதிகாரிகள் மற்றும் சில பெயர் குறிப்பிடாத அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு, வீட்டில் அமர வைக்கப்பட்டனர். இந்த சம்பவம், சிபிஐ மீதான பொதுமக்களின்  நம்பகத்தன்மைக்கு மிகப்பெரிய கரும்புள்ளியாக அமைந்தது. 

இந்திய சிபிஐ வரலாற்றில் முதன்முறையாக:
கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து அலோக் வெர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த பதற்றமான சூழலுக்கு இடையே மத்திய அரசின் நியமனக் கூட்டம் நள்ளிரவில் அவசர அவசரமாக கூடியது. இந்த கூட்டத்திற்கு பிறகு, சிபிஐ இணை இயக்குனராக பணியாற்றி வந்த நாகேஷ்வர் ராவ், சிபிஐ இடைக்கால இயக்குனராக அறிவிக்கப்பட்டு, இந்த அறிவிப்பு அதிகாலை முதலே நடைமுறைக்கு வந்தது. அன்றைய நாள் முற்பகலே நாகேஷ்வர் ராவ் பொறுப்பேற்றுக்கொண்டார். பிறகு, சிபிஐ தலைமையகத்தில் சீல் வைக்கப்பட்டிருந்த அனைத்து அறைகளும் மீண்டும் வழக்கம்போல் இயங்கும் வண்ணம் திறக்கப்பட்டன. 

ஆறுச்சாமி நாகேஷ்வர் ராவ்:
இயக்குனர் இருக்கையில் அமர்ந்ததும் நாகேஷ்வர் ராவ் சிபிஐ அதிகாரிகளின் மீதான புகார் அறிக்கைகளை ஆய்வு செய்யத் தொடங்கினார். இதன்பின் பேசிய சிபிஐ இணை இயக்குனர் என்.எம்.சிங், அஸ்தானா மீதான லஞ்ச வழக்கை விசாரித்த 11-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அதிரடியாக அறிவித்தார். இதில், அஸ்தானாவிற்கு நெருக்கமாக இருந்த Deputy SP ஏ.கே.பாஸி உட்பட DIG மனீஷ் குமார் சின்ஹா, DIG தருண் கௌபா, DIG ஜஸ்பிர் சிங், DIG அனீஷ் பிரசாத், DIG கே.ஆர்.சௌராஸ்யா, JD அருண்குமார் ஷர்மா, சாய் மனோகர், ராம் கோபால், முருகேசன், DIG அமீத் குமார், கூடுதல் SP எஸ்.எஸ்.கம் மற்றும் SP சதீஷ் தாகர் ஆகியோரும் அடங்குவர். பணியிட மாற்றம் செய்யப்பட்ட அறிவிப்பு வெளியானதும், ஏ.கே.பாஸி மூட்டை முடிச்சுகளைக் கட்டுக்கொண்டு வீட்டை நோக்கி நடையைக் கட்டினார். 

 

நோட்டமும் கைதும்:
நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம் ஏற்பட்டு வந்த இவ்வழக்கின் இடையே அலோக் வெர்மாவின் வீட்டை நோட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  இவர்களிடம் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டது காவல்துறை. இறுதியில், இவர்களின் மீது எந்தவித தவறும் இல்லை என்ற தகவலே வெளியானது. சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஷ்வர் ராவ் நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், சில சிபிஐ அதிகாரிகளும் அதிருப்தி தெரிவித்தனர். இதற்குக் காரணம், எண்ணற்ற வழக்குகளில் தொடர்புடையவராகக் கருதப்படும் நாகேஷ்வர் ராவை சிபிஐ இயக்குனர் பதவிக்கு அமர வைத்ததே. 

நாகேஷ்வர் ராவ் சிக்கிய 3 வழக்குகள்:
அனில் சின்ஹா தலைமையில் இயங்கிக்கொண்டிருந்த சிபிஐ-யில் கடந்த 2015-ஆம் ஆண்டு இணைந்தவர் தான் நாகேஷ்வர் ராவ். அப்போது 3 முக்கிய வழக்குகளில் நாகேஷ்வர் ராவுக்கு தொடர்பிருந்தது குறித்து ’கடந்த கால விரிவான விசாரணை அறிக்கை’ தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை சற்றும் பொருட்படுத்தாத சின்ஹாவும், மத்திய அரசினரும் நாகேஷ்வர் ராவ் கலங்கமற்றவர் எனக்கூறி அவரை சிபிஐ தலைமை வட்டாரத்தில் நிலைக்கச் செய்தனர். அந்த 3 வழக்குகளும் பின்வருமாறு,
1* எஸ்.பி.ஐ. நில கொள்முதல் வழக்கு: சென்னை மண்டலத்தின் சிபிஐ தலைவராக நாகேஷ்வர் ராவ் பணியாற்றி வந்த போது, விஜிஎன் டெவலப்பர்ஸ் நிறுவனத்தால் ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியா நிலம் வாங்கப்பட்டது. இதில் அரச கட்டுப்பாடுகள் மீறப்பட்டு ஊழல் நடைபெற்றதாகவும், இந்த ஊழலுக்கு சென்னை மண்டல தலைவரே பொறுப்பு எனவும் நாகேஷ்வருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டது. 
2* ஆயுத விற்பனையாளர் பண்டாரி கைது வழக்கு: கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரியில், ஆயுத விற்பனையாளர் சஞ்ஞெய் பண்டாரி மற்றும் வருமான வரித்துறை இணை ஆணையர் சலாங் யாடென் ஆகியோர் சட்டவிரோத ஆயுத விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டனர். பண்டாரியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரகசிய டைரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில், 70-ற்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்த அதிகாரிகள் மீது விசாரணை முன்னெடுக்க நாகேஷ்வர் ராவ் மறுத்து விட்டதாகவும், இவ்வழக்கு விசாரணை முடிவுகளை அப்படியே மூடி மறைத்ததாகவும் பகிரங்கமாக குற்றம்சுமத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட்ட ஆளும் பாஜக-வினர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவின் நெருங்கிய நண்பர் பண்டாரி என குற்றம்சாட்டியது. நடப்பாண்டு தொடக்கத்தில் சிபிஐ இணை இயக்குனராக நாகேஷ்வர் ராவ் பொறுப்பேற்றபோது அவரை பணியமர்த்துவதற்கு தடை கோரப்பட்டது, இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே.
3* வருமான வரி ஏய்ப்பு வழக்கு: கடந்த 2010-ஆம் நிதியாண்டிற்கு பிறகு நாகேஷ்வர் ராவ் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான குண்டூர் சொத்து அவரது மனைவியின் பெயரில் இருந்ததாக காட்டப்பட்டது. மேலும், நாகேஷ்வர் ராவ் சம்பாதித்த பல சொத்துக்கள் அவரது உறவினர்களின் பெயரில் பாதுகாப்பாக பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், இது வரி ஏய்ப்பு செய்வதற்கான முயற்சி என்றும் குற்றம்சாட்டப்பட்டது.  இந்த 3 வழக்குகளிலிருந்தும் நாகேஷ்வர் ராவின் பெயர் முழுமையாக நீங்காத நிலையில், அவர் சிபிஐ இயக்குனர் பதவியில் அமர்த்தப்பட்டது சர்ச்சைக்கு வித்திட்டது. 

பிரஷாந்த் பூஷன் Vs. நாகேஷ்வர் ராவ்:
நாகேஷ்வர் ராவ் மீதான பழைய குற்றச்சாட்டுகளை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன். இதன் நடுவே, சிபிஐ அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு தொடர்பில் சிறப்பு விசாரணைக்குழுவின் உதவி கோரும் பிரஷாந்த் பூஷனின் மனுவை  விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. மேற்கண்ட 3 வழக்குகளோடு, பிரஷாந்த் பூஷனின் வழக்குத்தாக்குதல் கணையும் ஒருசேர தொடுக்கப்பட்டதால் சிபிஐ இயக்குனர்கள் வழக்கிலும், நாகேஷ்வர் ராவ் நியமனத்திலும் பதற்றப்புயல் கிளம்பியது. அலோக் வெர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோர் மீது லஞ்சப்புகார் முன்வைக்கப்பட்ட தருணத்தில் நாகேஷ்வர் ராவ் மீதும் அடுக்கடுக்கான பழைய புகார்கள் தோண்டி எடுக்கப்பட்டது சிபிஐ வட்டாரத்தில் குழப்பத்தையும், குமுறலையும் அதிகரித்தது. விஜய் மல்லையா மற்றும் அகஸ்டா வெஸ்ட்லாண்டு வழக்குகளை கண்காணிக்கும் பணி நாகேஷ்வர் ராவ் வசம் இருந்ததால் அந்த வழக்குகளை இவர் எந்த விதத்தில் கையாள்வார் என்பதே மிகப்பெரிய வினாவாக விஸ்வரூபம் எடுத்து நின்றது. 

 

களமிறங்கினார் அஸ்தானா:
இத்தனை பரபரப்புகளுக்கு மத்தியில், கட்டாய விடுப்பை எதிர்த்து அஸ்தானா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு ஆயத்தமாகும் விதமாக, முன்னாள் அட்டர்னி ஜெனரலும் தலைமை வழக்கறிஞருமான முக்குல் ரோஹத்கீயின் வீட்டிற்கு நேரில் சென்றார் அஸ்தானா. தமக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசவே ரோஹத்கீயை அவர் சந்தித்ததாக கிசுகிசுக்கப்பட்டது. இதன்பின், உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் பேசிய முக்குல், ராகேஷ் அஸ்தானா தான் சிபிஐ சிறப்பு இயக்குனராக தொடர்வார் என சூளுரைத்தார். 

அருண் ஜேட்லி விளக்கம்:
சிபிஐ வட்டாரக் குழப்பங்களுக்கு இடையே பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே குற்றச்சாட்டுக்குள்ளான 2 உயரதிகாரிகளுக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், விசாரணைக்கு முன்பாகவே குற்றவாளிகள் யார் என்பதை கூற முடியாது என்று குறிப்பிட்ட அருண் ஜேட்லி, முழு விசாரணையையும் கண்காணிக்கும் அதிகாரமானது மத்திய புலனாய்வு ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

காங்கிரஸ் கிடுக்குப்பிடி:
மத்திய அரசின் விளக்கத்தின் பின்னர் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், "ஒன்றல்ல இரண்டல்ல 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்து தங்களது குறைகளை முறைட்ட ஜனநாயக நாடு இது. சிபிஐ அதிகாரிகள் விவகாரத்தில் மக்களாட்சி நிலை நிறுத்தப்படும் என உறுதியாக நம்பப்படுகிறது. சிபிஐ இயக்குனர்கள் ஒருவருக்கு ஒருவர் அதிகாரத்தை பறிக்க, இதைப்பார்த்துக்கொண்டிருந்த மத்திய அரசும் அதன் பங்கிற்கு அதிகாரப் பறிப்பை மேற்கொண்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகப்பெரிய அமைச்சரவையைக் கொண்டிருந்தாலும் ஆட்சி என்னவோ மிகவும் கீழ்த்தரமாகவே நடைபெறுகிறது" இவ்வாறு கூறினார்.  இதனிடையே காங்கிரஸ் எம்.பி ஷஷி தரூர் பேசுகையில், "நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 2 சிபிஐ  அதிகாரிகளில் ஒருவருக்கு ரஃபேல் இமாலய ஊழலில் தொடர்பிருக்க வாய்ப்பிருக்கிறது. திறன் வாய்ந்த அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக்குழுவின் விசாரணையை அமைக்க உச்ச நீதிமன்றம் செவி சாய்க்க வேண்டும். சிறப்புக்குழுவின் விசாரணையானது அரசின் முழு ஒத்துழைப்புடன் வெளிப்படைத்தன்மையாக நடைபெற வேண்டும்" இவ்வாறு பேசினார். 

ரஞ்சன் கோகாய் அதிரடி உத்தரவு:
ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இப்படி மாறி மாறி சாடிக்கொண்டிருக்க, அலோக் வெர்மா தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது. இதில், வெர்மாவிற்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஃபலி நரிமன், அலோக் வெர்மாவின் சிபிஐ இயக்குனருக்கான 2 ஆண்டுகள் பதவிக்காலம் எப்போது வேண்டுமானாலும் முடிவடையும் அபாயம் இருப்பதாக கூறினார். தொடர்ந்து வாதிட்ட அவர், அலோக்கிற்கு கட்டாய விடுப்பு அளிக்கும் முடிவை புலனாய்வு ஆணையமும், மத்திய அரசும் சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். வாதத்தின் முடிவில் பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய அரசின் இடைக்கால ஆணை எத்தகையது என்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். சிபிஐ இயக்குனர்களிடம் புலனாய்வு ஆணையம் நடத்தும் விசாரணையை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும், அதுவரை இடைக்கால இயக்குனர் நாகேஷ்வர் ராவ் எந்தவொரு கொள்கை முடிவுகளையும் எடுக்கக் கூடாது எனவும் ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார். மேலும், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்னாய்க் தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். 

நாடு தழுவிய போராட்டம்:
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இப்படியிருக்க, மறுபுறம் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீதான மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய கண்டனப் போராட்டத்தை அறிவித்தது காங்கிரஸ். இதனால் உஷாரான காவல்துறை டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பை பலப்படுத்தியது. கர்நாடகாவில் உள்ள சிபிஐ அலுவலக வளாகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதில், பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததன் பிறகு அனைத்து வழக்கு விசாரணைகளையும் சிபிஐ நிறுத்தி விட்டதாக குற்றம்சுமத்தப்பட்டது. பீகார் சிபிஐ அலுவலகம் எதிரே இடம்பெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் ஆண் தொண்டர்களின் எண்ணிக்கைக்கு இணையாக பெண் தொண்டர்களும் கலந்துகொண்டு கண்டத்தை பதிவு செய்தனர். லக்னோ சிபிஐ அலுவலகம் முன்பாக நடந்த போராட்டத்தின் போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சண்டிகரில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களைக் கலைக்க போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்ததால் அப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவியது. தெலங்கானாவில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், சிபிஐ விஷயத்தில் உண்மையை மறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக முழக்கங்களை எழுப்பினர். டெல்லி தயால் சிங் கல்லூரி - சிபிஐ தலைமையகம் வரை நடைபெற்ற கண்டனப்பேரணியை  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னின்று நடத்தினார். இவருடன், காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் ஷர்மா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா மற்றும் ஷரத் யாதவ் உட்பட பலரும் பங்கேற்றனர். இதில், தள்ளுமுள்ளுவிற்கும் பஞ்சமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ராகுல்காந்தி கைது:
டெல்லியில் கண்டனப்பேரணி சிபிஐ தலைமையகத்தை அடைந்ததும் கூச்சலும் குழப்பமும் அதிகரித்தது. இதன்பின், ராகுல்காந்தி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெரிய தலைகள் கைது செய்யப்பட்டனர். கைதான சில நிமிடங்களிலேயே விடுவிக்கப்பட்ட ராகுல் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, பிரதமர் மோடி என்னதான் ஓடி ஒளிந்தாலும் இறுதியில் உண்மை தான் வெல்லும் எனவும், சிபிஐ இயக்குனருக்கு எதிராக பிரதமர் செயல்பட்டிருப்பதாகவும் கூறினார். 

 

பாஜக பதிலடி:
போராட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியபோது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பொதுமக்களின் பிரச்சனையை கையில் எடுப்பதற்கு பதிலாக சிபிஐ விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுக்க என்ன காரணம்? என்ற விமர்சனக்கேள்வியை எழுப்பினார். விசாரணை அறிக்கை தாக்கலாகும் வரை அனைவரும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

மீண்டும் அலோக்:
இத்தனை அரசியல் குழப்பங்களைக் கடந்து வந்துள்ள சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் இப்போது சிறப்பான தீர்ப்பு ஒன்றை வழங்கி பிரச்னைக்கு தற்காலிக தீர்வை தேடித்தந்துள்ளது. கட்டாய விடுப்பு அளித்த மத்திய அரசின் நடவடிக்கை செல்லாது என்பது தான் அந்த தீர்ப்பு. இதைத்தொடர்ந்து, சிபிஐ தலைமை பதவியை தற்போது மீண்டும் அலங்கரித்துள்ளார் அலோக் வெர்மா. 

 

News Counter: 
100
Loading...

mayakumar