கொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..!

share on:
Classic

அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் தீயில் கருகி பலியாயின. 

பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் கடந்த சில தினங்களாக நெருப்பின் கோர தாண்டவத்திற்கு இரையாகி வருகிறது. அது சம்மந்தமான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி பலரின் இதயங்களை சிதைத்து வருகிறது. இந்த தீயின் கோர தாண்டவத்தில் இதுவரையில் எப்போதும் இல்லாத அளவிற்கு பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலியாகி இருக்கலாம் என கருதபடுகிறது. காட்டுத்தீ தொடர்ந்து காடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த காட்டு தீயில் இதுவரை பல லட்சம் மரங்கள் எரிந்து சாம்பல் ஆகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

55 லட்சம் சதுர கிலோ மீட்டர் படர்ந்து விரிந்திருக்கும் அமேசான் மழைக்காடு  பிரேசில், பொலிவியா, கொலம்பியா உள்ளிட்ட 9 நாடுகளில் பரவியுள்ளது. அமேசான் காடு பரப்பளவில் மட்டும் பெரியதாக மட்டும் இல்லாமல்,  பல ஆச்சரியங்களையும் இயற்கையின் பொக்கிசங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. இதில் முதன்மையாக உலகில் கிடைக்கும் 20% ஆக்ஸிஜன் அமேசான் காடுகளில் இருந்தே கிடைக்கப் பெறுகின்றது.

இங்கு, பொழியும் மழை தரையைத் தொடவே 10 நிமிடங்களாகும் . இத்தகைய அடர்ந்த அமேசான் காட்டினை 40 ஆயிரம் வகையிலான தாவர இனங்கள், 3 ஆயிரம் மீன் இனங்கள், 400க்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவை இனங்களும், 25 லட்சம் வகையிலான பூச்சிகளும் தங்களது வாழ்விடமாக கொண்டு வாழ்ந்து வருகின்றன.

 

இது போன்ற மழை காடுகளில் ஒரு மரம் விழுந்தால் அது மீண்டும் முளைக்க பல வருடம் ஆகுமாம் இதனால் இந்த காடுகளை பாதுகாப்பது மிக முக்கியமான விஷயம். ஆனால் தற்போது இங்கு ஏற்பட்டுள்ள தீ விபத்தில் இருந்து அமேசான் காடு மீண்டு வர பல நூறு வருடங்கள் ஆகலாம் என கருதப்படுகிறது.

 

வெப்ப அதிகரிப்பால் மட்டும் இன்றி சட்ட விரோதமாகவும் இங்கு காடுகள் அழிப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சமீபத்தில் பிரேசில் அதிபர்  போல்சோனரோ அமேசான் காடுகள் அழிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் அங்குள்ள பழங்குடி மனிதர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்களை கூறி அங்குள்ள பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

2018 ஆம் ஆண்டோடு ஒப்பிடுக்கையில் இந்தாண்டு காடுகள் பற்றி எரியும் நிகழ்வானது 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதாவது இந்தாண்டு இதுவரை சுமார் 72 ஆயிரத்திற்கும் அதிகமான காட்டுத்தீ சம்பவங்கள் அமேசானில் நிகழ்ந்துள்ளன. பிரேசிலில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து அண்மையில் அந்நாட்டு அதிபர் போல்சோனரோ பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி தலைவரை பணிநீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஞ்ஞானத்தின் வளர்ச்சிகள் பல கட்டத்தை தாண்டி சென்றாலும், இது போன்ற நிகழ்வுகள் இயற்க்கை எதற்கும் கட்டுப்பட்டதல்ல என மனித இனத்திற்கு ஒவ்வொரு முறையும் உணர்த்தி வருகிறது.

  

News Counter: 
100
Loading...

Saravanan