அம்பானியின் அடுத்த டார்கெட் காஷ்மீர்..!!

share on:
Classic

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 42வது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முகேஷ் அம்பானி சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதல் நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொழில் தொடங்க உள்ளதை உறுதிபடுத்தினார்.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி மத்திய அரசு நீக்கியது. மேலும், ஜம்மு காஷ்மீர் பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் (லட்சத்தீவுகள், அந்தமான் போன்று), ஜம்மு காஷ்மீர் பகுதி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் (புதுச்சேரி, டெல்லி போல) மாற்றம் செய்யப்பட்டது.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காஷ்மீரை தனியாருக்கு தாரை வார்ப்பதற்காக போடப்பட்ட திட்டம்தான் இது என பல விமர்சனங்களும் எழுந்தன. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்ய தொழில்துறையினர் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

 

இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 42வது ஆண்டுப்பொதுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இக்கூட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டு பேசினார். 

அதில், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கே கடன் பிரச்னை இருப்பதாகவும், அடுத்த 18 மாதங்களில் ஒரு ரூபாய் கூட கடன் இல்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய அத்தியாயம் படைக்கும் என்றார். இதனை தொடர்ந்து இந்த மாநாட்டில் பல புதிய திட்டங்களை அறிவித்தார், அதில், முக்கியமான ஒன்று ஜியோ நிறுவனத்தில் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள ஃபைபர் நெட்ஓர்க் குறித்த அறிவிப்பாகும்

அதனையடுத்து, யாரும் எதிர்பாரா வண்ணம் “ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் ரிலையன்ஸ் குழுமம் முதலீடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளது, ஜம்மு காஷ்மீரில் எத்தகைய முதலீடுகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் ரிலையன்ஸ் எத்தகைய முதலீடுகளை மேற்கொள்ளப் போகிறது என்பது குறித்து வரும் நாட்களிலான அறிவிப்புகள் வெளிவரும் எனவும், இதற்காக சுமார் 1 லட்சம் கோடி ரூபாயை அங்கு முதலீடு செய்யப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.   

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்குவதும், புதிய தொழில்கள் தொடங்குவதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் காஷ்மீருக்குள் படையெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் ஆளாக அங்கு கால் வைக்க உள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானி, ‘ஜம்மு காஷ்மீர் பகுதி வளர்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கும். அந்தப் பகுதிக்கான சிறப்பு திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்து அம்மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

Ramya