ஜொலிஜொலிக்கும் மலேசிய கண்ணாடி கோவில்

Classic

கோலாலம்பூர் முருகன் சிலையையும் தாண்டி உலகப்புகழ் பெற்று, மலேசியாவின் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது ஜோஹோர் பாருவில் உள்ள ராஜகாளியம்மன் கண்ணாடி கோவில்.

மலேசியாவில் பிரம்மாண்ட திருவுருவச் சிலையாக காட்சியளிக்கும் தமிழ் கடவுள் முருகப் பெருமானின் உலகப் புகழ்பெற்ற ‘பத்து மலை’ கோவிலைப் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால் அதே மலேசியாவில் உலகம் முழுவதும் உள்ள இந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள மற்றொரு புகழ்பெற்ற தமிழ் தெய்வக் கோவிலைப் பற்றி கேள்விப் பட்டதுண்டா?.. மலேசியாவின் தெற்கு பகுதியில் உள்ள ‘ஜோஹோர் பாரு’ நகரத்தில் இருக்கும் ‘ஸ்ரீ ராஜகாளியம்மன் கண்ணாடி கோவில்’ தான் அது. ஆம், முழுக்க முழுக்க வண்ணக் கண்ணாடிகளால் கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவில் மிகவும் பழமையானது. 1922-ல் சிறிய குடிலில் செயல்பட்டு வந்த இக்கோவில் 1991-ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. சில மாற்றங்களுடன் 1996-ல் பக்தர்களின் தரிசனத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

 

மாற்றி அமைக்கப்பட்ட விதமும் காரணமும்:
கோவிலின் தலைமை குருக்கள் ஸ்ரீ சின்னத் தம்பி சிவசாமி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் பாங்காக் சென்றிருந்தார். அப்போது ஒரு இடத்தில், தூரத்தில், வைரக்கல் மின்னுவதை போன்று ஒளிவீசுவதைப் பார்த்தார். அங்கு சென்று பார்த்தபோது, ஒளிவீசிய அந்த இடம் ஒரு கோவில் என்பதையும், அது முழுக்க முழுக்க, கண்ணாடியால் கட்டப்பட்டிருப்பதையும் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.அப்போது தான், ராஜகாளியம்மன் கோவிலையும் இதேபோல் நேர்த்தியாகவும் எழில் மிகுந்ததாகவும் மாற்ற வேண்டும் என முடிவெடுத்தார். அதன்பின், மலேசியா திரும்பிய அவர், அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்தார். சுமார் 5 கோடி செலவில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டன.

 

மலேசியாவின் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற கோவில் :
கோவிலின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்கள் முழுவதும், பல வண்ணங்களில் ஒளிவீசும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டன. தரைப் பகுதியில், ஒளியை பிரதிபலிக்கும் வகையில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொசைக் கற்கள் பொருத்தப் பட்டன. கோவிலில் உள்ள தூண்கள், சுவர், மேற்கூரை என் அனைத்து பகுதிகளும், நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய, சிவப்பு, ஊதா, மஞ்சள் நிறங்களிலான, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணாடிகளால் அலங்கரிக்கப்படுள்ளது. இந்த கோவிலில் பொருத்துவதற்காகவே, ஒளியை, வித்தியாசமாக பிரதிபலிக்கக் கூடிய, மின் விளக்குகள், ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் குவியும் இந்த அழகிய ஒளிக் கோவில், மலேசியாவின் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் இக்கோவிலைக் காண கண் கோடி வேண்டும் என்று தான் கூறவேண்டும்.

News Counter: 
100
Loading...

youtube