ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2019 : 17 பதக்கங்களுடன் 4 வது இடத்தை பிடித்தது இந்தியா..!

share on:
Classic

தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கோலாகலமாக நிறைவடைந்தது. இதில், இந்தியா 17 பதக்கங்களுடன் 4 வது இடத்தை பிடித்தது.

23-வது ஆசிய தடகள சேம்பியன்சிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் உள்ள கலீபா சர்வதேச மைதானத்தில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கியது. 4 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா, குவைத், பஹ்ரைன், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஓமன் உள்ளிட்ட 43 நாடுகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனை பங்கேற்றனர். 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 2.70 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்று சாதனை படைத்தார். இதேபோல், குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர் சிங் தூர் 20.22 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

மகளிர் பிரிவில் ஹெப்டத்லான் போட்டியில் சுவப்னா பர்மனும் ஈட்டி எறிதலில் அன்னு ராய் ஆகியோரும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். ஆடவர் பிரிவில் ஈட்டி எறிதலில் சிவ்பால் சிங்கும் 3,000 மீட்டர் ஸ்டீபில் சேஸ் போட்டியில் அவிநாசும் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். 400 மீட்டர் ரிலே போட்டியில் இந்திய பெண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆஜய் குமார் சரோஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் டியூடி சந்த் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார். பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பி.யூ சித்ரா தங்கம் பதக்கம் வென்று அசத்தினார்.

முடிவில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்ளை வென்று 4-வது இடம் பிடித்தது.  பதக்கப்பட்டியலில் 11 தங்கம், 7 வெள்ளி், 4 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வென்று பஹ்ரைன் முதலிடத்தை பிடித்து.  சீனா 10 தங்கம், 13 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தை பிடித்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற அசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 12 தங்கம், 5 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்கள் வென்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, கோலாகலமாக 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நிறைவு பெற்றன.

News Counter: 
100
Loading...

Ragavan