அசாம் வெள்ளப்பெருக்கு : சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தவிப்பு..

share on:
Classic

அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள 17 மாவட்டங்களுக்கு பரவியதால் சுமார் 4.23 லட்ச மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

அசாம் மாநிலத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்குள்ள 11 மாவட்டங்களில் உள்ள 2.5 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் அது 6 மாவட்டங்களுக்கு பரவியதன் காரணமாக நேற்று சுமார் 4.23 லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர். தேமாஜி, லகிமிபூர், பிஸ்வந்த், தரங், பாரபெட்டா, நல்பாரி, சிரியாங், கோலாஹட், மஜூலி, ஜோர்ஹட், திப்ருஹர், நாகோன், மோரிகான், கொக்ரஜஹர், போங்கைகோன், பாக்சா, போனிக்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் அங்குள்ள காசிரங்கா தேசிய பூங்காவிலும் வெள்ள நீர் புகுந்ததால், அங்குள்ள விலங்குகள் நடைபாதைகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்களில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களின் ஆணையர்களுடன் நேற்று வீடியோ கான்பிரன்சிங் முறையில் உரையாடிய அம்மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனோவால், நிலைமையை உடனடியாக சமாளிக்கவும், திறம்பட கையாளவும் உத்தரவிட்டார். மேலும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரண பொருட்கள் சென்றடைகிறா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும், மருத்துவ உதவிகள் உட்பட அடிப்படை உதவிகள் கிடைக்க வழிவகை செய்யவும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ramya