அத்திவரதரின் வரலாறும்... தொடரும் சர்ச்சைகளும்....

share on:
Classic

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அத்திவரதர் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். அத்திவரதரின் வரலாறு குறித்தும், அத்திவரதரின் தரிசிக்க செல்லும் கூட்ட நெரிசல், அதனால் ஏற்படும் சர்ச்சைகள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்காலாம்..

தற்போதய காஞ்சிபுரம், புராண காலத்தில் அத்திவனம் என்ற பெருங்காடாக இருந்தது. அத்திமரங்கள் நிறைந்த காடு என்பதால் அத்திவனம் என்று பெயர் வந்தது. படைப்பு தொழிலை கொண்ட பிரம்மா ஒருமுறை பெருமாளை நோக்கி யாகம் ஒன்றை ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த யாகத்திற்கு தனது மனைவியான சரஸ்வதி தேவியை அழைக்க மறந்துவிட்டார் பிரம்மா. இதனால் சினம் கொண்ட சரஸ்வதி தேவி, வேகவதி என்ற ஆறாக உருவெடுத்து வெள்ளமாக மாறி அத்திவனம் நோக்கி ஆவேசமாக விரைந்தார். இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அத்திவனத்தின் விலங்குகள், மக்கள் என யாவரும் நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்தனர். இந்த பேராபத்தை தடுக்க பெருமாளிடம் முறையிட்டார் பிரம்ம தேவர். யாகத்தின் அக்கினியிலிருந்து நெருப்பே உருவான அத்திவரதராய் எழுந்தருளினார் பெருமாள். அத்திவரதரின் வெப்பம் தாளாமல் தன் திசையை மாற்றி கடலில் சேர்ந்தார் வேகவதி நதியாக இருந்த சரஸ்வதி தேவி. 

பின்னர் அத்திவரதரின் வெப்பத்தை தணித்து குளிர்விக்க, அவரை குளத்தில் துயில செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. மேலும் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருவேன் என்று பெருமாள் தெரிவித்தார். அதன்பிறகு பெருமாள் பிரம்ம தேவருக்கு விடுத்த கட்டளைப்படி, அத்திவரதர் சிலை வரதராஜ பெருமாள் கோயிலின் திருக்குளத்தில் துயில் கொள்கிறது.

40 ஆண்டுகளுக்கு குளத்து நீரில் இருந்து பெருமாள் மேலே எழுந்தருளுவார். சயன மற்றும் நின்ற கோலமாக 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் அத்திவரதர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே காட்சியளிப்பார் என்பதால், எப்போதும் கூட்டம் அலைமோதும். கடைசியாக 1979-ம் ஆண்டு காட்சியளித்த அத்திவரதர், தற்போது 2019-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவரை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். அத்திவரதர் தரிசனத்திற்காக காஞ்சிபுரத்திற்கு சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையும் செய்து வருகின்றன.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என பல்வேறு அரசியல் தலைவர்களும் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இதேபோல் இளையராஜா, விஜயகுமார், செந்தில் உள்ளிட்ட பிரபலங்களும், தமிழக அமைச்சர்களும் காஞ்சிபுரம் சென்று அத்திவரதர் தரிசனத்தை பெற்றுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. கூட்ட நெரிசல், போதிய ஏற்பாடுகள் இல்லை என்ற பிரச்சனைகள் ஒருபுறமிருக்க, விவிஐபி வரிசையில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதேபோல் அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்க கூடாது என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்தார். கடந்த காலங்களில் திருட்டு பயம் காரணமாக அத்திவரதரை குளத்திற்கு அடியில் வைத்தோ, தற்போது அது தேவையில்லை. இதுதொடர்பாக முதல்வரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கை விடுக்க உள்ளோம் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இதனிடையே அத்திவரதர் வைபவத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் திட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. சம்மந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், விவிஐபி வரிசையில் பொதுமக்களை அனுமதித்தாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா காவலரை கடுமையான வார்த்தைகளால் திட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வேகமாக பரவியதை அடுத்து, பொன்னையா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் அத்திவரதர் விழாவில் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். சமூக வலைதளங்களில் உண்மை நிலவரம் தெரியாமல் கருத்துகளை பரப்புவதாக கூறிய அவர், தவறான செய்திகள் மூலம் கருத்து வேறுபாடுகளை பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்தார். அத்திவரதர் வைபவம் இன்னும் 3 நாட்களில் முடிவடைய உள்ளது. ஆகஸ்டு 17-ம் தேதி ஆகம விதிப்படி பூஜைகள் செய்து, மீண்டும் அவர் இருந்த குளத்தில் மீண்டும் அத்திவரதரின் சிலை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Saravanan