ஹிட்மேனின் சதம் வீண்... இந்திய அணி போராடி தோல்வி....

share on:
Classic

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. 

புவனேஷ்வர் குமார் சதம்:
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் ஸ்கோர் 8-ஆக இருந்த போது கேப்டன் ஃபிஞ்ச் (6 ரன்கள்) ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ஃபின்ச் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 100-வது விக்கெட்டை கைப்பற்றினார் புவனேஷ்வர் குமார். கரே 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ஆஸ்திரேலிய அணி 41 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் இணைந்த குவாஜா - மார்ஷ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க கடுமையாக போராடியது. இந்த போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போட முயற்சித்த இந்திய பவுலர்கள் தங்களது வேகத்தை அதிகப்படுத்தினர்.

ஆஸ்திரேலியா 288:
இந்திய பவுலர்களை சமாளித்து அரைசதம் கடந்த குவாஜா 59 ரன்களிலும், மார்ஷ் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் அதிரடி காட்டிய ஹான்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. ஸ்டோய்னிஸ் 47 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 11 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய பந்துவீச்சுத் தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  

இந்தியாவின் மெகா சொதப்பல்:
289 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணியின் ஸ்கோர் 1-ஆக இருந்தபோது தவானும் (0), 4-ஆக இருக்கும் போது கேப்டன் கோலியும் (3), அம்பத்தி ராயுடுவும் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து கடுமையாக தடுமாறியது. இந்த தருணத்தின்போது ஆஸ்திரேலிய அணி அதன் வெற்றி வாய்ப்பை விரிவாக்கிக் கொண்டது. 

ஹிட்மேன் - ஃபினிஷர் பொறுப்பு:
நிலைமையை புரிந்துகொண்டு ரோகித் ஷர்மா - தோனி ஜோடி நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. பார்ட்னர்ஷிப்பில் சதம் கடந்த நிலையில் தோனி 96 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய ஹிட்மேன் ரோகித் ஷர்மா 129 பந்துகளில் 6 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 133 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்ற ரோகித்தின் முயற்சியில் தோனியைத் தவிர வேறு எந்த வீரரும் நிலைக்காததால் இந்தியாவின் தோல்வி உறுதியானது.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 

ஆஸ்திரேலியா ஆனந்தம்:
ஆஸ்திரேலிய பவுலிங் தரப்பில் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளையும், பேரண்டார்ஃப் மற்றும் ஸ்டோய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளையும், சிடில் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஆஸ்திரேலிய பவுலர் ரிச்சர்ட்சனுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற வெற்றிக்கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடைசியாக விளையாடியுள்ள 24 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்தியாவிற்கு எதிராக தற்போது பெற்றுள்ள வெற்றி அந்த அணிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.  

News Counter: 
100
Loading...

mayakumar