இந்தியாவுக்கு 289 ரன்கள் இலக்கு... 100-வது விக்கெட் கைப்பற்றிய புவனேஷ்வர்

Classic

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் ஸ்கோர் 8-ஆக இருந்த போது கேப்டன் ஃபிஞ்ச் (6 ரன்கள்) ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ஃபின்ச் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 100-வது விக்கெட்டை கைப்பற்றினார் புவனேஷ்வர் குமார். 

கரே 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ஆஸ்திரேலிய அணி 41 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் இணைந்த குவாஜா - மார்ஷ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க கடுமையாக போராடியது. இந்த போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போட முயற்சித்த இந்திய பவுலர்கள் தங்களது வேகத்தை அதிகப்படுத்தினர். இந்திய பவுலர்களை சமாளித்து அரைசதம் கடந்த குவாஜா 59 ரன்களிலும், மார்ஷ் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் அதிரடி காட்டிய ஹான்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. ஸ்டோய்னிஸ் 47 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 11 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய பந்துவீச்சுத் தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  289 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. கடைசியாக விளையாடியுள்ள 24 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

mayakumar