இறந்த பெண்ணின் கருப்பைக்குள் பிறந்த குழந்தை..! 

share on:
Classic

இறந்த பெண்ணின் உடலில் இருந்து தானமாக கருப்பை பெறப்பட்டு அதன் மூலம் மற்றொரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது மருத்துவ உலகின் புதிய மைல் கல்லாக அமைந்துள்ளது.

பத்து வருடங்களுக்கு முன்பு வரை திருமணமாகி குழந்தையில்லாமல் போனால் நான்கைந்து வருடங்கள் பிறகுதான் மருத்துவரைச் சந்திக்க வந்துகொண்டிருந்தார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்புவரை திருமணமான அடுத்த மாதமே குழந்தை இல்லை என மருத்துவமனைகளுக்குப் படையெடுக்க ஆரம்பித்தார்கள். 

 

வாழ்க்கைமுறை மாற்றம், உணவு முறை, கருப்பை கோளாறுகள், அதீத மன அழுத்தம், கருப்பை குழந்தையை தாங்கும் திறனில்லாமல் இருப்பது, போன்ற பல காரணங்களால் பலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போய் விடுகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு வளர்ந்து வரும் மருத்துவ  முறையும் அவர்களின் குறைகளை போக்கி குழந்தை பாக்கியம் பெற துணை புரிகிறது.

 

கடந்த 2014-ஆம் ஆண்டு சுவீடனில் முதன் முறையாக ஒரு சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் நல்ல ஆரோக்யமான ஒரு பெண்ணின் ஆரோக்யமான கருப்பை குழந்தை பாக்கியம் இல்லாத மற்றொரு பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. இதில் அந்த பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

 

 அடுத்தக்கட்டமாக இறந்த பெண்ணின் கருப்பையை எடுத்து வேறு பெண்ணுக்கு பொருத்தி குழந்தை பிறக்க வைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வந்தனர். இந்நிலையில், பிரேசிலில் பிறக்கும்போதே கருப்பை இல்லாமல் பிறந்த பெண், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்தார். அந்த பெண்ணுக்கு பக்கவதத்தால் இறந்த ஒரு பெண்ணின் கருப்பையை தானமாக பெற்று பொருத்தினர்.

 

கருப்பை பொருத்தப்பட்ட சில மாதங்களுக்கு பின் செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யப்பட்டு கர்ப்பம் ஆன அந்த பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. கருப்பையின்றி பிறந்த அப்பெண்ணுக்கு இச்சோதனை மூலம் குழந்தை பிறந்துள்ளது, ஒரு வரபிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் மருத்துவ உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் சாதனையாக கருதப்படுகிறது.
 

 

News Counter: 
100
Loading...

sasikanth