பிரசவத்தின் போது குழந்தையை இரண்டு துண்டாக்கிய கொடூர செவிலியர்கள்..!

share on:
Classic

ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில்  பெண்ணிற்கு பிரசவம் பார்த்த செவிலியர்கள் மிக கடினமாக குழந்தையை வெளியே இழுத்ததால் குழந்தையின் உடல் பிரிந்து தலை மட்டும் தாயின் வயிற்றிலேயே இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மெர் என்ற பகுதியில் ராம்பர்க் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. பிரசவம் பார்த்த ஆண் செவிலியர்கள் குழந்தையை மிகவும் கடினமாக வெளியே இழுத்ததால் குழந்தையின் தலை தாயின் வயிற்றிலேயே இருந்தது. குழந்தையின் உடலை  செவிலியர்கள் அமிர்த் லால் மற்றும் ஜுஹார் சிங் ஆகிய இருவரும் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலேயே புதைத்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம், பிரசவம் கடினமாக உள்ளதால் மேல்சிகிச்சைக்கு ஜோத்பூர் அழைத்து செல்லுங்கள் என்று கூறினர். அந்த மருத்துமனையில் பணியாற்றிய நபர் ஜோத்பூர் மருத்துவமனையை தொடர்பு கொண்டு அங்குள்ள மருத்துவரிடம் தாங்கள் பிரசவம் பார்த்துவிட்டதாகவும், தொப்புள் கொடி மட்டும் வயிற்றிலேயே உள்ளதாகவும் தெரிவித்தனர். ஜோத்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த போது குழந்தையின் தலை வயிற்றில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் ராம்பர்க் மருத்துவமனை செவிலியர் மீது புகார் அளித்தனர். பிரசவம் பார்த்த இரண்டு ஆண் செவிலியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட மருத்துவரான நிகில் ஷர்மா பிரசவத்தின் போது இல்லாததால் மருத்துவர் பணியிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind