மீண்டும் அலமாறியை அலங்கரிக்கும் பித்தளை, ஸ்டீல் பொருட்கள்...

share on:
Classic

பிளாஸ்டிக் மீதான தடையை வரவேற்கும் மக்கள் :

ஜனவரி 1 முதல் ப்ளாஸ்டிக் பைகள், டீ கப்கள், வாட்டர் பேக்கட்டுகள் உள்ளிட்ட 14 ப்ளாஸ்டிக் பொருட்கள் மீது தமிழக அரசு தடை விதித்தது. அதன்படி நேற்று முதல் இந்த தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

 

மக்கள் பெரிதும் உபயோகிக்கும் ப்ளாஸ்டிக் கவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டதால், ஹோட்டல், டீ கடை, காய்கறி கடை என பல இடங்களிலும் மக்கள் வீட்டில் இருந்து துணிப்பை அல்லது தூக்கு கொண்டு செல்ல வேண்டியது கட்டாயம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த ப்ளாஸ்டிக் தடை சாத்தியமல்ல என பலர் சமூக வலைதளங்களில் கூறிவந்தனர். ஆனால் தற்போது இந்த நிலை தலைகீழ். காரணம் மக்கள் ஆர்வமாக வீட்டில் இருந்தே பைகளை கடைகளுக்கு கொண்டு செல்கின்றனர். 

 

 

அலமாறியை அலங்கரிக்கும் பித்தளை , ஸ்டீல் பொருட்கள் :

இயற்கையை காக்கும் விதமாக ப்ளாஸ்டிக் பைகளுக்கு குட்பை சொல்லிவிட்டு வீட்டின் பரன் மேல் இருந்த பழைய ஸ்டீல் மற்றும் பித்தளை தூக்குகளை தூசி தட்டி கடைகளுக்கு மகிழ்ச்சியாக கொண்டு வருகின்றனர் மக்கள். உணவு வாங்க வீட்டில் இருந்தே டப்பாக்களை கொண்டு வரும் மக்களுக்கு சில  ஹோட்டல் உரிமையாளார்கள் சலுகைகளையும் வழங்கி வருகின்றனர்.

 

ப்ளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல நம் ஆரோக்கியத்திற்கும் அது கேடு என்பதை உணர்ந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக முழுவதும் ப்ளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பார்கள் என கருத்து தெரிவிக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். 

 

எங்கே கைப்பை..? கேள்வி கேட்கும் விற்பனையாளர்கள் :

காய்கறி , பால், மளிகை பொருட்கள் என எதை வாங்க கடைகளுக்குச் சென்றாலும், கடைகாரர்கள் ப்ளாஸ்டிக் பைகளை தருவதில்லை, மாற்றாக வீட்டில் இருந்தே பையை கொண்டு வந்தீர்களா என கேள்வி எழுப்புகின்றனர். அப்படி வாடிக்கையாளர்கள் கொண்டுவரவில்லை என்றால் அடுத்தமுறை கட்டாயம் கொண்டுவாருங்கள் என அறிவுறுத்தி அனுப்பு வைக்கின்றனர்.

 

கடந்த ஆண்டு இறுதியிலேயே பலர் ப்ளாஸ்டிக் பைகளை உபயோகிக்காமல் தவிர்த்தனர். கடைகளுக்கு வரும்போது பொதுமக்கள் கைப்பையை உடன் கொண்டு வர வேண்டும் என்று கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், சாலையோர உணவகங்களிலும் ப்ளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக தட்டில் வாழை இலை வைத்து உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

 

நில்... கவனி... தவிர் :

இதுவரை நாம் உபயோகப்படுத்திய ப்ளாஸ்டிக் கழிவுகள் இமயமலையின் உயரத்தை விட பல மடங்கு அதிகம் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். இன்று நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு ப்ளாஸ்டிக் பொருட்களும் நாளை பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். கடல் வாழ் உயிரினங்கள் பலவும் தினந்தோறும் ப்ளாஸ்டிக் கழிவுகளை உண்டு உயிரிழக்கின்றன.

 

பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இயற்கையை காக்க வேண்டிய ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட. எனவே ப்ளாஸ்டிக்கை இனி உபயோகிக்காமல் கவனமாக தவிர்க்க வேண்டும். நம் வீட்டின் அலமாறிகளை மீண்டும் பழைய பொக்கிஷங்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது. 

ஒருங்கிணைவோம்... இயற்கையை பாதுகாப்போம்...

News Counter: 
100
Loading...

aravind